பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/406

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

402

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தமிழையே பேச்சாகவும் மூச்சாகவும் கொண்டு வாழ்ந்ததனாலேதான் அன்றையத் தமிழின் தகைமை சான்ற தன்னிகரில்லாத வாழ்வு வாழ முடிந்தது. தமிழ், வாழவும் வாழ வைக்கவும் போதிக்கும் ஒரு செம்மொழி. உறவாடி மகிழவே மொழி உதவுகிறது. உணர்ச்சிகளை வாயாலே காட்டுவதுடன் கண்ணாலும் முகத்தாலும் காட்டிவிடலாம். ஆனால் உணர்ச்சியைச் செம்மைப்படுத்தி உறவாட உதவும் கருவியாக நமது மொழி கருதப்பட்டது.

இன்றைய நிலையில் கலப்பு வந்துவிட்டது. சந்தேகமும் சலனமும் இக்கலப்பால் தலைகாட்டுகின்றன. இறைவனிடத்தில் உறவாடக்கூடக் குறிப்பிட்ட ஒரு மொழிதான் வேண்டுமென்று வலியுறுத்துபவர்களை இன்று காண்கிறோம். எல்லாம் வல்ல - எல்லாம் அறிந்த எம்பெருமான் குறித்த ஒரு மொழி மட்டுமே தெரிந்தவராக இருக்கமாட்டார். தேவமொழியாக ஒரே மொழியை விரும்பி, அம்மொழிவழித் தொடர்புகளுக்குத்தான் செவிசாய்ப்பவராக இறைவன் இருப்பாரா? சுரண்டலும் சுயநலமும் ஆதிக்கம் செலுத்திய காலத்தில், கடவுளின் பெயரால் சிலர் செய்த கண்மூடித்தனமான பொய்ப் பிரச்சாரங்களில் இதுவும் ஒன்றாகி விட்டது. கடவுளை எங்கோ ஓரிடத்தில் வைத்து, எவரோ ஒருவரைத் துணைக்குக் கூப்பிட்டு, வழிபாடு நடத்தாத காலத்தில் குறிப்பான சில சடங்குகளும் குறித்த ஒரு மொழியும்தான் கடவுள் நெறி காண உதவும் என்ற கோட்பாடு வளரவில்லை. தமிழர், முத்தமிழால் வைதாரையும் வாழவைக்கும் முதல்வனை வழுத்தினார்கள்; வாழ்த்தினார்கள். அந்த வாழ்த்துதலுக்கு இறைவனின் இசைவும் இருந்தது. அத்தகைய இசைவினை இப்போதும் பெறலாம். பெறவும் முடியும்.

நல்லவர்களை உருவாக்கும் பண்ணைகளான தேவாலயங்களில் தாய்மொழியில் வழிபாடு இன்றியமையாத ஒன்றாகும். இதயதாபங்களை அடக்கி-அழித்து இனிய