பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/407

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஈழத்துச் சொற்பொழிவுகள்

401


நிலையை உருவாக்க, தாய்மொழியால், எந்தையும் தாயுமான மங்கைபங்கனைப் போற்றிப் புகழவேண்டும். “வடமொழியும் தென் தமிழும் ஆனான் கண்டாய்” என்ற தத்துவம் இப்பொழுது நடைமுறையில் அதிகமாக இல்லாதது வருத்தத்தைத் தருகிறது. இறைவன் தமிழ் மொழியில் எவ்வளவு பற்று வைத்திருந்தான் என்பது வரலாற்று மூலமாகவே கண்டு மகிழக்கூடியதாய் இருக்கிறது.

வேதம் ஓதி விழிநீர் பெருக்குவதைப் போலவே திருமுறைகளை ஓதியும் விழிநீர் பெருக்கலாம். திருமுறைச் செல்வர்களில் ஒருவரான மணிவாசகப் பெருமான் “நானே பொய் என்நெஞ்சும் பொய் என் அன்பும் பொய் ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே” என்று அரற்றி அழுது அருளார் அமுதம் பெற்றார். அழுவதற்கு உள்ளம் உருகவேண்டும்; உணர்ச்சி கசிய வேண்டும். அவைகளின் நெகிழ்ச்சிக்குத் தாய்மொழிதான் உதவும். எந்த மொழி வல்லுநனும் தன்னையொட்டிய சிந்தனையைத் தன் சொந்த மொழியிலேதான் சிந்திக்கிறான். அதைப் போல் நம்மைச் சார்ந்த வழிபாட்டுச் சிந்தனையும்-சிந்தனை வெளிப்பாடும் நமது தாய்மொழியிலிருந்தால் நலம் பயக்கும்.

தமிழருக்குச் சொந்தமான சில தகைமை இருப்பது போல, இறைவனிடத்தில் சொந்த மொழிவழித் தொடர்பும் இருக்க வேண்டும். இப்படிக் கூறுவதால் எம்மை வேற்று மொழி வெறுப்பாளர் என்று எண்ண வேண்டாம். மொழித் தொடர்பினால் - காலத்தால் மூத்த சமய குரவர்கள் சிறப்புற வாழ்ந்தது போல நாமும் வாழவேண்டுமென்ற விருப்பு நமக்கு உண்டாக வேண்டும். வேற்று மொழியை ஆதரித்து நமது மொழியைப் போற்ற வேண்டும். வடமொழியில் வேதம் என்பதை நாம் மறை என்று தமிழ் ஆக்குகிறோம். வேதம் என்பது வேய்தல் அதாவது மூடுதல் எனப்படும் ஆணவத்தை மூடிமறைக்க வேதங்கள் உதவுகின்றன. நமது தமிழ் மொழியில் முகிழ்த்த வேதமாகத் திருக்குறளைக் கருதுகிறோம். அறம்