பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/408

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

404

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பொருள் இன்பம் வீடு ஆகிய உறுதிப்பொருள்களைத் தர எழுந்த வேதம் குறள். தமிழில் பெரும் பெரும் வேதங்கள் உருவாகி இருந்திருக்கலாம். ஆனால் கடல் கோள்களினாலும் பூகம்பங்களினாலும் அழிந்து மறைந்திருக்கலாம். இப்பொழுது நமக்கு உதவுவன திருமுறைச் செல்வங்களே. இச்செல்வங்கள் கூட மூடிமறைக்கப்பட்டிருந்தன. சிலர் தம் ஆதிக்க வாழ்வு - ஆட்டங் கண்டு விடுமென்றஞ்சித் திருமுறைகளை மறைத்துப்பூட்டினர். சிதம்பரத்திலே மறைத்திருந்த திருமுறைகள் ஆண்டவனின் விண்ணொலியாற் பெறப்பட்டன. அவற்றை நம்பியாண்டார்நம்பி தெரிந்து தமிழுலகுக்கு அளித்தார். அத்திருமுறைகள் மறைக்கப்பட்டதோடு மறைந்தொழிந்திருந்தால் இப்பொழுதிருக்கும் நமது நிலை என்னவாக இருக்கும்? தத்துவப் பெருக்கால் தம்மை உயர்ந்தவர்களாக எண்ணி இறும்பூதடையும் சிலர் நம்மை எப்படி இழித்துரைப்பார்கள்.

“கல்லைப் பிசைந்து கனியாக்கி” என்பதுபோல-நம் நெஞ்சக் கனகல்லை நெகிழவைக்கத் தாய்மொழி வழிபாடு உதவுகிறது. வழிபாட்டிற்குக் காதல், கனிவு, கசிவு தேவை. சிந்தனைவழியாகவே காதல், கசிவு, கனிவு போன்றவை பிறக்கும். காதலும் கசிவும் உண்டாகிவிட்டால் கோவிலிலே வக்கீல் வைத்து வணங்கவேண்டிய முறை தேவைப்படாது. யான் எனது என்ற செருக்கழித்து, சமுதாயத்துக்கு நலம் பயக்கத் தெய்வ வணக்கம் பயன்படவேண்டும். இமயத்திலே, பொதிகையிலே ஊற்றெடுக்கும் தண்ணீர் எங்கும் பரவி விரவி ஓடிப்பயனளிக்கிறது. ஆனால் மனிதனின் இதயமலையிலே ஊற்றெடுக்கும் சிவமயம் கோவிலோடும் பூசையறை யோடும் நின்றுவிடுகிறது. வெளியில் வந்தவுடன் ‘என் மயம்’ ஆகிறது. எவ்வுயிர்க்கும் ஈசனுக்கும் தமக்கும் அன்புள்ளவர்களாக ஆக்கும் பெற்றி வழிபாட்டுக்கு உண்டு.

எனவே, இனத்தை ஒத்த மொழியிற் பிடிப்பும்- பாசமும் இருத்தல் வேண்டும். ஆண்டவனிடத்தில் சொந்த