பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/410

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

406

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


எம்மைத் துணுக்குறச் செய்தன. உழைப்பிருக்கும் இடத்திலிருந்து இகழ்ந்தொதுக்குதலும் பிறர்க்குதவா மனப்பான்மையும் அகலவேண்டும். வீணான முயற்சிகளும் வீண் செலவுகளும் வாழ்க்கையில் விரக்தியைத் தரக்கூடியன. பீடிகள் சாராயம் போன்றவற்றில் உள்ள அதிக ஈடுபாடு உங்கள் வாழ்க்கையை நாசம் செய்வதாகவும் அறிந்தேன். மனத்திற்கு அமைதிதேடி மதுப்பழக்கத்தை மேற்கொள்கிறீர்கள் போலும். குடி குடலைக் கெடுத்துக் குணத்தை அழிக்கும். நரம்பைத் தளர்த்தி உடம்பை வாட்டும். மரணப்பாதையில் மயானத்திற்கு அனுப்பிவிடும். இவ்வெளிப்படை உண்மை விளங்கியும் கூட நீங்கள் அவ்வழிச் செல்வது அல்லலைத் தருகின்றது.

கடவுளின் பெயராலும் உங்கள் கட்குடிப் பழக்கம் வழக்கிலிருப்பதாகக் கேள்வியுற்று வருந்துகிறேன். நல்லன. வற்றை நாடி வாழத்தான் நமக்குக் கடவுள் வழிபாடு இருக்கிறதே தவிர, தீயவற்றைத் தேடித்திரிந்து பெறுவதற்காக அல்ல. வாழ்க்கையில் உங்களுக்கு மகிழ்ச்சி இல்லாமைக்குச் சிந்தனையற்ற போக்குத்தான் காரணம். வாழ்வில் சிந்தனையில்லாது போனால் வரும்பொருள் சேராது-வளமும் பெருமையும் கிட்டா. நாளும் உழைத்ததைச் சேமித்து நல் வாழ்வுவாழ ஆசைப்படவேண்டும். பாடுபட்டு உழைத்து அதற்குரிய பயனை அனுபவியாமற் போனால், அது மனிதத் தன்மையாகுமா? உங்களது வாழ்க்கைக்கு-நல்வாழ்வுக்கு வழி சொல்லக்கூடிய பெரியாரை உங்களிடத்திலே தேடிப்பிடித்து -அவர் சொல்லும் அனுபவ உண்மைகளுக்குச் செவிசாய்த்து நீங்கள் வாழவேண்டும். வாழ்க்கைத் துணையில்லாது. போனால் வாழும் இல்லறம் சிறக்காது என்பார்கள். இல்லாள் இல்லாத இல்லம் இடுகாட்டுக்கு ஒப்பாகும் என்பது நம்மவர் வழக்கு. இதுபோல் நல்ல அறிவுக்கு-நற்சிந்தனைக்கு நாம் பெரியாரைத் துணைக்கொள்ளவேண்டும். ‘பெரியாரைத் துணைககோடல்’ என வள்ளுவரே ஓர் அதிகாரம் வகுத்திருக்கிறார். நல்லவர்களாகிய பெரியவர்