பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/412

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

408

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தொழிலாளர்கள் பிளவுபட்டுப் பலப்பல சங்கடங்களை உண்டாக்குவது பயன்தராது. பிரிவும்-பிளவும் நன்மையைத் தருவதில்லை. இதனாலேதான் வள்ளுவர் பல்குழு கூடாதென்கிறார். தொழிலாளியின் நலனைப் பேணக்கூடிய- மனக்கவலை பொருளற்ற துன்பம் போன்றவைகளை அகற்றக்கூடிய ஒரு மாபெரும் சங்கத்தை உண்டாக்க வேண்டும். உலகியலிலே-அதுவும் இன்றைய நிலையில் பொருள்தான் மிகமுக்கியமானது. வேராடினால் மரம் வளராது; பூத்துக் காய்த்துக் கனி தராது. அதுபோலவே பல நன்மைகளுக்கும் பொருட்சேமிப்பு அவசியம் வேண்டும். பொருளில்லார்க்கு இவ்வுலகு இல்லை யென்பதைப் போலவே பொருளற்ற சங்கத்துக்கும் வாழ்வில்லை; வளர்ச்சியில்லை. பொருளாதார வளம் உண்டாகிவிட்டால் வறுமையில் செம்மையோடு வாழ்க்கையில் நேர்மையாக வாழ வழி பிறக்கும். ஆன்மீகச் செழுமையும் அரும்பி வளரும். ஆகவே கட்டுக்கோப்பான ஒற்றுமையும், உழைப்பும், சேமிப்பும், நேர்மையும், செம்மையும் உங்களிடத்தே உருவாக வேண்டும். அத்தகைய நிலைக்கு ஆண்டவனது துணையும் அவசியமானது.

உங்களின் கட்டுக்கோப்பில் சாதியோ, மொழியோ, மதமோ குறுக்கிடக்கூடாது. அவை தலைகாட்டினால் கட்டுக் கோப்புக் குட்டிச் சுவராகிவிடும். நாமெல்லாரும் மனிதர்கள்; ஒரு குலத்தைச் சேர்ந்தவர்கள்; நமக்கெல்லாம் தாயும் தந்தையுமான அம்மையப்பன் தலைவனாக இருந்து அருள் சுரக்கிறான். அவனது அருள் மழை நம் எல்லாருக்கும் சொந்தமானது. எல்லாரும் இன்புற்றிருக்க நினைக்கவே நம்மை ஆண்டவன் மனிதராகப் படைத்திருக்கிறான். பிறவிகளில் மனிதப் பிறவி உயர்ந்தது. “அரிது அரிது மானிடராதல் அரிது” என்று அவ்வைப் பிராட்டியும், “வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்” என்று அப்பரடிகளும் சொல்லியிருக்கிறார்கள். இவற்றை எண்ணி