பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/417

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஈழத்துச் சொற்பொழிவுகள்

413


போதாது. வீடுகள் தோறும் கலையின் விளக்கம், என்று கவிஞன் பாரதி கூறியது போல் கலைகள் இல்லங்கள் தோறும் எழுந்தருளி இருள் நீக்கி ஒளிபரவவேண்டும். நமது நாட்டிலே நம்மிடையே கலைப்பெருக்கத்திற்குக் குறைவில்லை. பெருக்கமிருக்கிறதே தவிர பெருக்கத்தை யொட்டிய பலனைக்காணோம். நமக்குள் ஒருநல்ல மனப்பான்மை யுண்டு; அது எதையும் பாராட்டுதல். வீணை வித்துவானை, நடிப்புச் செல்வனை-பாடலாசிரியனை-இசை விற்பன்னனைப் பாராட்டி மகிழ்வதில் நமக்கு ஒரு தனிவிருப்பு. பாராட்டி மகிழ்வதோடு பயன்களையும் விளைவிக்கவேண்டும். கலைகள் வெறும் பாராட்டுகளோடு நின்றால் வாழ்வுக்குப் பயன்படாத வீண்பொழுது போக்காய் முடியும். நம்மிடையே சந்தேகமும் கள்ளத்தனமும் இப்போது உருவாகியிருக்கின்றன. பொருள் உள்ளவனிடத்திலே இல்லாதவன் களவாய்க் கவர்ந்து செல்ல நினைக்கின்றான். பொருள் உள்ளவன் நல்லவனைக் கூடச் சந்தேகித்துத் தற்காப்புத் தேடிப் பொருட்காப்புச் செய்கின்றான். முன்பெல்லாம் பனி, மழை, வெய்யில் போன்றவற்றிற்கும் விலங்குகள் போன்றவற்றிற்கும் தப்பித்துக்கொள்ளவே தற்காப்புத்தேடி வீடுகளைக் கட்டினார்கள். இன்று பக்கத்து விட்டானைப் பகைவனாக்கி அவனை நம்பாமல் திருடனாக்கி அயோக்கியனாக்கி அவனிடம் இருந்து நம்மை நாம் காப்பாற்றவே வீடுகளை எழுப்புகிறோம். களவு காவல் என்ற தத்துவ அடிப்படையில் வீடுகளைக் கட்டுகிறோம்.

இந்த நிலை மாறவேண்டும். மாற்றத்தைக் கலைகள் போதிக்க வேண்டும். மனித வாழ்வின் எல்லாத் துறைகளுக்கும் வேண்டிய நல்லுணர்வுகளைக் கலைகள் காட்ட வேண்டும். உழைத்துப் பிழைத்து முன்னேற வேண்டிய அவசியத்தை உணர்த்த வேண்டும். பாடுபடுபவன் உழைப்பவன் நல்லபடி வாழ-அதிக ஆசையற்றுப் போதுமென்ற மனத்துடன் பொதுமை வாழ்வில் அக்கறை கொள்ள