பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/42

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்றும் திருவாசகம் பேசும். எனவே அறிவு வளர்ந்து கொண்டிருக்கிறது; அது வளரட்டும். அப்படி வளர்ந்து வரும் அறிவை நமது சமயநெறி என்றும் மறப்பதில்லை. இனிமேலும் மறுக்காது. மிகஉயர்ந்த சார்பற்ற அறிவு, நோக்கமற்ற அன்பில் ஒன்றாகிக் கலக்கும்பொழுதே கடவுளுண்மை காட்சிக்கு வரும் அனுபவத்திற்கு வரும். அது நம்மிலிருந்து வெகு தொலைவிலிருக்கிற இலட்சியம்; சில தகவல்களைத் தெரிந்து கொள்வதற்குப் பயன்படுகிற கல்வியறிவும், இயற்கையின் நுட்பங்களை அறிந்து கொள்ளப் பயன்படுகிற விஞ்ஞான அறிவும் அறிவின் தொடக்க நிலை வாயில்கள். இந்த எல்லையிலேயே நின்று கொண்டு இதேதான் அறிவு என்று கடவுளை மறுத்தலிற் பயனில்லை. ஆதலால் கடவுள் உண்டு என்று நம்பி வழிபாடு செய்வது முறையான அறிவு வளர்ச்சிக்கு, நிறைவான அறிவு என்று பாராட்டப்படுகின்ற ஞானத்தைப் பெறுவதற்குத் துணை செய்யும். உயிர், குறைவற்ற-நிறைவான-நன்மை வழிப்பட்ட அன்பின் மயமாதல் முழுமையான அறிவுநிலை; அதற்கே “ஞானநிலை” என்று பெயர். இந்த ஞானம் வந்தாலன்றி உயிர்கள் குறை நீங்கப் பெறா; இன்ப அன்பு எய்த இயலா. 'ஞானத்தினாலன்றி வீடில்லை' என்பது அனுபவ வாக்கு.

எண்ணி எண்ணி அழுவதே வழிபாடு

கடவுள் வழிபாடு என்பது ஒரு பயிற்சி முறை. உண்மையான வழிபாடு என்பது சடங்குகள் மட்டுமன்று. கடவுள் நெறியில் தம்மை வழிப்படுத்திக் கொள்ளுதல் என்பதாகும். அதாவது குற்றங்களினின்றும் விலகி நிறைபெற முயற்சி செய்தல்; தீமை செய்யாது விலகி நன்மை செய்தல்; துன்பத்திற்குரிய காரணத்திலிருந்து விலகி இன்பத்தின் களங்களை அடைதல், மகவெனப் பல்லுயிரையும் ஒக்கப் பார்த்து அன்பு செய்தல் ஆகியன கடவுள் வழிபாட்டின் உயிர்க் கொள்கைகள். இந்தச் சிலங்களை எளிதில் பெற