பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/424

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

420

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


எதற்காக உழலுகிறோம்? என்று அவன் சிந்திப்பதில்லை. குறிப்பாகத் தமிழர்களாகிய நமக்குக் கேள்விகேட்பதென்பதே கசப்பாயிருக்கிறது. எதையும் துருவித்துருவி நுணுக்கமாகவும் ஆழமாகவும் ஆராய்ந்ததினாலேதான் தத்துவாசிரியர்களும் பெரும் பேராசிரியர்களும் தோன்றினார்கள். மனிதச் சுழற்சி ஒருவிதத் தூய்மையைத் தருகிறது. அனுபவ உண்மைகள் அகத்தினை அலசித் துய்மையாக்கித் துலங்கவைக்கின்றன.

கடலிலே உள்ள தண்ணீர் சூரிய வெப்பத்தினால் வான் நோக்கிச் சென்று, மீண்டும் மழையாகி மலைவழியே வருகிறது. மனிதனின் உள்ளப்பாங்கில் உப்புத்தன்மை நிறைய உண்டு. உப்புத் தன்மை சுழற்சி அனுபவத்தால் அற்றுப் போகிறது.

தங்கத்திற்கு எவ்வளவோ மதிப்புண்டு. அதையொட்டிய வரலாறோ பெரிது. நிலத்திலே தோன்றி வளர்ந்து நமது கைக்கு வந்து பலவழிகளிலும் பக்குவமாகிப் பயன் படுத்தப்படுகிறது. நம்முள்ளே உள்ள ஆன்மா தங்கத்துக்குச் சமமானது. ஆனால் அது நிறைந்த பல அழுக்குகளால் பின்னப்பட்டுக் கிடக்கிறது. அழுக்கை அகற்றி ஆன்மாவை நல்வழிப்படுத்த ஆன்மநேயத் தொண்டுகளிலும் சிந்தனைகளிலும் நாம் ஈடுபடவேண்டும். அழுக்கை அகற்றவே ஆண்டவன் நம்மை இங்கு அனுப்பினான். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால், நன்றாகக் குளித்துவிட்டு வாருங்கள் என்று நல்ல நீர்த்தேக்கத்தைக் காட்டி விட்டிருக்கிறான். நாம் நீர்த்தேக்கத்தைப் பற்றி நினைத்துப் பாராமல் அதனருகே நாற்றம் எடுத்துக்கிடக்கும் சேற்றினை வாரிப் பூசிக்கொண்டிருக்கிறோம். உடலுக்கு நலம் தேவை என்பது மறுக்க முடியாதது. உடல் நலத்தோடு உள்நலத்தையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

உடலைத் தூய்மையாக்கப் பலவகையான சோப்புக்களை உபயோகிக்கின்றோம். ஆனால் உள்ளத்தூய்மைக்கு