பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/43

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமது நிலையில் சமயம் சமுதாயம்

39


இயலாது. இவற்றைப் பெறுதற்கு நாம் செய்யும் முயற்சிகளே வழிபாட்டுச் சடங்குகள். பிரார்த்தனை அல்லது வழிபாடு என்பது இறைவனை மகிழ்விப்பதன்று; அவனுக்குக் கொடுக்கக்கூடிய கைம்மாறுமன்று. நமது நாடு மழையின்மையால் வறட்சியடைந்து வாடுவதைக் கண்டு மழைக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்யும்படி நாம் கேட்டுக் கொண்டோம். தமிழகத்தின் திருக்கோயில்களில் பிரார்த்தனைகள் நிகழ்ந்தன. தமிழகம் முழுவதும் பரவிக் கிடக்கும் பேரவை உறுப்பினர்கள் ஊனுருக, உளமுருகப் பிரார்த்தனை செய்தனர். மழையும் பெய்தது. ஆனால், பகுத்தறிவாளர் ஒருவர், “பிரார்த்தனை செய்தால்தான் இறைவன் மழை பெய்விப்பான் என்றால், அவன் அவ்வளவு தன்னல வாதியா?” என்ற வினாவை எழுப்பியிருந்தார். வினா எழுப்புவதற்கும், வினா எழுப்பப்படும் துறையில் ஆழ்ந்த அனுபவம் வேண்டும். கடல்கள், நீர் நிலைகள் முதலியவற்றில் உள்ள தண்ணீர் கதிரவன் வெப்பத்தால் நீராவியாக மாறி மேகமாக உருவாகி வானவீதியில் உலாவந்து குளிர்ந்த காற்று மோதுவதால் நீர்த்துளிகளாக மாறி மழை பொழிகிறது. இதுவே மழைப் பொழிவைப்பற்றி அறிவியல் தரும் பாடம். மழைப் பொழிவிற்குரிய காரணங்களுள் கடைசித் தேவையாகிய குளிர்ந்த காற்றைத் தவிர மற்றவையெல்லாம் இருக்கின்றன; நிகழ்கின்றன. ஆனால் குளிர்ந்த காற்றில்லை. காற்று குளிர்ந்த காற்றாக மாறுவதற்கு மக்கள் மன வளம் பெற்றவர்களாக இருக்கவேண்டும். அன்பிலும் அறத்திலும் தோய்ந்த நெஞ்சுடையவர்களாக இருக்கவேண்டும். அறவுணர்வு இல்லாதார் வையகத்தில் மிகும்பொழுது வளம்மிக்க மலையும்கூட வறுமையடையும் என்று கற்றோர் போற்றும் கலித்தொகை பேசுகிறது.[1]

உயிர்கள் தம் குறைகளை - குற்றங்களை யறிந்து அவற்றினின்றும் விடுதலை பெற நிறைநலம் பெற எண்ணி எண்ணி அழுவதே பிரார்த்தனை. “எண்ணத்தின் வழியே

  1. "வள்ளிகீழ் வீழா வரைமிசைத் தேன்தொடா
    கொல்லை குரல்வாங்கி ஈனா மலைவாழ்நர்
    அல்ல புரிந்தொழுக லான்.கலி, குறிஞ்சி, 3