பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/432

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

428

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தலையாய வாழ்வு என்று கருதியவர்கள் அன்றையத் தமிழர்கள்.

அன்றையத் தமிழர் பெரியோரைப் பேணினர் - சுற்றத்தைத் தழுவினர். இரந்தவர்க்கு ஈந்தனர். இன்னல் கண்டவிடத்து இரங்கினர். எல்லாவற்றுக்கும் சிகரமாகத் தமக்கு மேலான சக்திக்கு மதிப்பளித்து மதச்சார்புடைய மகிழ்ச்சி வாழ்வு வாழ்ந்தனர். கடவுள் நம்பிக்கையும், மதச் சார்பும் மனிதனுக்கு இன்றியமையாதனவென்று கருதி வாழ்ந்த்னர் உள்ளத்தூய்மைக்கும், உயர்ந்த வாழ்வுக்கும் உவகை நிலைக்கும் உள்ளுறுசோதியை, உள்ளம் விட்டு ஓரடி நீங்கா ஒருவனை நம்பினர். நலம் பெற்றனர். யாருக்கும் அஞ்சாத நெஞ்சுரம், மதத்தைச் சார்ந்த மக்களுக்கு இருந்தது. தலைபோகின்ற நிலைவந்தாலும் கடவுளைத் தவிர வேறெவர்க்கும் தலைகுனியாத தருக்கு அப்போதிருந்தது. நாங்கள் எவருக்கும் குடிமக்களல்லர். எங்களை எமனும் எதுவும் செய்துவிடமுடியாது; நரகத்துக்கு நாம் செல்லப் போவதில்லை. எந்தத் துன்பமும் மக்களை எட்டிப்பாராது. இதனாலே நாம் இன்புற்றுச் செம்மாந்து உலவுவோம்; பிணி துன்பம் இல்லாத பேரின்பவாழ்வு எங்களுடையது. நாங்கள். ஒரேயொருவருக்குத்தான் பணிந்தவர்கள். அவரும் தமக்கு மேலாக யாராவது ஒருவரை வைத்திருப்பவரல்லர்-அவர் எவருக்கும் குடிமகன் அல்லர்; அவருக்கே எமது பணிவு என்றுமுண்டு என்றார் அப்பரடிகள். “நாமார்க்கும் குடியல்லோம்” என்பதே அத்திருப்பாடல்.

அப்பரது சுதந்திர தாகமும் உரிமை மனப்பான்மையும் ஓர்ந்து உணரத்தக்கவை. சுதந்திர தாகத்தை அப்பர் வெளிப்படுத்திய முறையினை நாம் மறந்துவிடலாகாது. அப்பரடிகளின் அசைக்கமுடியாத கடவுள் நம்பிக்கைதான் பல்லவ மன்னனின் கட்டளையைத் துச்சமென எண்ண வைத்தது.