பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/44

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மனிதன் வாழ்வு” என்று உளநூல் தத்துவமும் உடன்படுகிறது. மாணிக்கவாசகர் உயிரின் குறை நிலையினையும் கடவுளின் நிறை நிலையினையும் ஒப்புநோக்கிப் பாடுகின்றார். அவ்வழி நம்மை ஒப்புநோக்கிச் சிந்தனை செய்யத் தாண்டுகின்றார். குற்றங்களினின்று நீங்கி நிறை நலம் பெற வழி நடத்துகின்றார்:

ஆயநான் மறையவனும் நீயே யாதல்
அறிந்துயான் யாவரினுங் கடைய னாய
நாயினேன் ஆதலையும் நோக்கிக் கண்டு
நாதனே நானுனக்கோர் அன்பன் என்பேன்[1]

யானே பொய் என்நெஞ்சம் பொய், என் அன்பும் பெ
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே?[2]

என்ற பாடலில் பொய்ம்மையை நினைந்து அழத்தூண்டுகின்றார். மகாகவி டென்னிசனும், “பரம்பொருளை நோக்கி உயிர்கள் அழும் அழுகையே பிரார்த்தனை” என்கிறார். ஆக பிரார்த்தனையால் உயிர்கள் குற்றங்களினின்று விடுதலை பெறுகின்றன; பகைமை அகல்கிறது; அன்பு சூழ்கிறது: அவ்வழி மனம் குளிர்கிறது. அதனால் காற்று மண்டலம் குளிர்ச்சியடைகிறது. வான் புயலை நீர்த்திவலைகளாக மாற்றும் குளிர்ந்த காற்றுக்கிடைக்கிறது; மழை பொய்கிறது: இதுவே தத்துவம். ஆகவே பிரார்த்தனை என்பது உயிரை வளர்க்கும் நெறி; உயிரைத் தூய்மைப்படுத்தும் நெறி.

பக்தி-திருத்தொண்டு-தொண்டு

பிரார்த்தனை கங்குகரையற்ற - எல்லைக்கோடுகளற்ற அன்பில் கலக்கும் பொழுது பக்தியாக உருப்பெறுகிறது. பக்தியென்பது உறுப்புக்களில் தொடங்குவதன்று. உணர்வில் முகிழ்த்து, உறுப்புக்களில் பரவி அன்பு மயமாக்குவது. கண்ணப்பர் அதற்கு ஓர் எடுத்துக்காட்டு. அன்புக்குக் கண்ணப்பர் உவமையன்று, கண்ணப்பருக்கு அன்பு உவமை.

  1. திருவாசகம், திருச்சதகம், 23
  2. திருவாசகம், திருச்சதகம், 90.