பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/443

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஈழத்துச் சொற்பொழிவுகள்

439


“போதோடு நீர் சுமந்தேந்திப் புகுவார்; அவர் பின் புகுவேன்” என்கின்றார். அங்கு சாதியைப் பற்றிய சாயலே இல்லை. சாதி, குலம், பிறப்பு என்னும் சழக்குகளை அறுத்தெறிந்து ஆண்டவன் சந்நிதானத்தில் எல்லோரும் சமமம் என்ற உணர்வினை உண்டாக்க வேண்டும். அவ்வுணர்வினை உண்டாக்கச் சைவர்களாகிய நாம் சமுதாயத்தில் இறங்கி உழைக்க வேண்டும்.

நல்லனவற்றை நினைப்பதிலும் சொல்வதிலும் பார்க்க அவற்றை நடைமுறையில் கொண்டுவர முயற்சிப்பதே மேலானது; அகத்திலே உள்ள தூய்மையும், அன்புப் பெருக்குமே ஆண்டவன் வழிபாட்டிற்கு உகந்தன. இக் காலத்தில் புறத் துய்மையோடு நிறைகொள்கிறார்கள். நீறு பூசி உருத்திராக்கம் தரிப்பவர்கள் சிலரின் பக்கத்தில் நெருங்கினால் துர்நாற்றம் அடிக்கிறது. அகத்திலே தூய்மை இல்லாது, அன்பு இல்லாது திருநீற்றின் வெண்மை போன்ற உள்ளமில்லாது புறத்தை மட்டும் அலங்கரிப்பதில் என்ன பயன்?

நமது சமயம் புனிதத்தோடு தொடர்புடையது. அகமும் புறமும் ஒரு சேரப் புனிதமடையாத தன்மையாலேதான் நமது சமயத்தவர் எண்ணிக்கை நாளடைவிற் குறைகிறது. காந்தத்தோடு கலந்திருக்கும் இரும்பும் காந்தமாகிறது. மின்சாரத்தைத் தொட்ட கம்பியிலே மின்சாரம் ஏறுகிறது. அது போலவே நாமும் இறைவனைத் தொட்டால், நினைத்தால் அவன் அருள்கிட்டும். இறைவன் உருத்தெரியாக் காலத்தே உட்புகுந்து மன்னி இருக்கின்றான். வண்டுகள் மொட்டை ஊதி மலர வைக்கின்றன. அதுபோலவே அடியார்களது இதய மொட்டுக்களை ஊதி மலர வைக்கவேண்டும். திருமடங்கள் அடியார்களது மனமொட்டு மலருமாறு ஊதவும் ஓதவும் வேண்டும். கோவில் என்ற தாய், ஆன்மா என்ற குழந்தைக்கும் தெய்வ மணம் கமழச் செய்ய வேண்டும். வேலி பெரிதல்ல. பயிர்தான் பெரிது; வரப்புப் பெரிதல்ல; பயிர் தான் பெரிது.