பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/46

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அவற்றைப் போலத்தான் இறைபணி என்பதும். திருத்தொண்டு என்பது இறைநலத்தை உயிர்கள் பெறச்செய்யும் பணி; சிறப்பாகத் திருக்கோயிலைத் தூய்மை செய்தல், மலர் தொடுத்தல், உழவாரப் பணி செய்தல், பாடுதல் ஆகிய பணிகளாகும். பழங்காலத்தில் நம்முடைய திருக்கோயிற் பணிகள் திருத்தொண்டுகளாக இருந்தன. அன்று அவை உயிர்நலம் கருதிச் செய்யப்பெற்றன. ஆதலால் அன்று, திருக்கோயில்களில் திருவருள் திருவோலக்கம் இருந்தது. காலப்போக்கில் அவை தொழில் மயமாகிவிட்டன. இன்று அர்ச்சிப்பதிலிருந்து ஆலயத்தைத் தூய்மை செய்யும் பணிவரை அறங்காவல் வரை தொழில் முத்திரைகள் பெற்றுவிட்டன. அதனால் உலகியல் கட்டுக்கோப்பு ஆதிக்கத்திற்குரிய பதிவுகள் அனைத்தும் அங்கு வந்து விட்டன. உயர்ந்தோர் - தாழ்ந்தோர். பெரியோர் - சிறியோர், களவு-காவல், ஏவல் செய்வோர்-ஏவல்கேட்போர் ஆகிய உலகியல் முத்திரைகள் அனைத்தும் அங்குப் பதிந்துவிட்டன. ஆதலால் திருக்கோயில் வட்டாரத்தில் இன்றைக்குத் திருத்தொண்டர்கள் இல்லை. திருமடங்களின் வட்டாரங்களும் அப்படியேதான். அப்பரடிகள்,

நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா
நீத்தலும்எம் பிரானுடைய கோயில் புக்குப்
புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கு மிட்டுப்
பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித்
தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச்
சங்கரா சயபோற்றி போற்றி யென்றும்
அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதி யென்றும்
ஆருரா என்றென்றே அலறா நில்லே[1]

என்ற பாடலில் திருத்தொண்டின் முறைமைகளைக் குறிப்பிடுகின்றார். இந்த உணர்வில் திருத்தொண்டு செய்வார் இன்று யார்? இந்த அவல நிலை வந்ததற்குக் காரணம்

  1. திருநாவுக்கரசர், ஆறாந்திருமுறை, 312.