பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/47

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமது நிலையில் சமயம் சமுதாயம்

43


திருக்கோயில்கள் அப்பட்டமான நிறுவனங்களாக உருமாறி வளர்ந்ததுதான்; அவை, உலகியல் பொருட்செல்வத்தின் குவியலாக மாறியதுதான். ஆற்று நீர் ஓடிக்கொண்டே இருக்குமானால் தூய்மைப் பாதுகாப்புச் செய்யவேண்டியதில்லை. ஆற்றிற்கும் இன்னாருடைய ஆறு என்று எல்லை குறித்த பெயர் கிடையாது; ஊற்று வளமும் ஓட்டமும் இல்லாத குளமாக, குட்டையாகத் தண்ணீர் தேங்கிவிடின் தூய்மைப் பாதுகாப்புத் தேவை. திருக்கோயில்களில் சமய நிறுவனங்களில் பொருள் வரும்; வரவேண்டும். அவை எல்லை குறியாமல் மக்கள் மன்றத்திற்குச் சென்று கொண்டே இருக்கவேண்டும். அங்குச் செல்வம் தேங்கி அஃது உடைமையாக மாறி விடின், துய்ப்புக்கும் எல்லை வந்துவிடும்; துய்ப்புக்கு எல்லைவரும் பொழுது மனித குலத்தில் தீமைகளும் வந்தே தீரும்; அடிப்படை ஆட்டம் கொடுக்கும். இந்த இடத்தில்தான் தொண்டு கால் கொள்கிறது. பக்தியில் பெற்ற உணர்வினால், திருத்தொண்டின்வழிப் பெற்ற பயனால் மனித குலம் வளர, வாழச் செய்வது தொண்டு. ஆக பக்தி, திருத்தொண்டு, தொண்டு ஆகியன ஒன்றையொன்று தழுவி நிற்பன. இதுவே நமது ஆன்றோர் காட்டிய சமய வாழ்க்கை அவ்வழியில் நாம் பயணம் தொடங்கும் பொழுதே நமக்கும் சமய அனுபவம் கிடைக்கும்.

உருவ வழிபாடு ஏன்?

எல்லா உயிரும் உயர்ந்த பக்திமையைப் பெறவேண்டு மென்றால் அவை வழிபாட்டில் ஈடுபடவேண்டும். வழிபாடு என்பது காட்சியினால் மட்டும் நிகழ்த்துவதன்று. வழிபாடு உண்மையான - நிறைவான பயனைத் தரவேண்டுமென்றால் பொறிகளும்-புலன்களும், ஊனும்-உயிரும், உணர்வும், ஒன்றாகக் கலந்து செய்தல் வேண்டும். அந்த அடிப்படையிலேயே நம்முடைய சமயம் திருவுருவ வழிபாட்டை ஏற்றுக்கொள்கிறது; வற்புறுத்துகிறது. இன்றும் சிலர், கடவுளுண்மையை ஒத்துக் கொள்கிறார்கள். திருவுருவ வழிபாட்டைக்