பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/50

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அதுபழச் சுவையென அமுதென அறிதற்
கரிதென எளிதென அமரரும் அறியார்
இதுஅவன் திருவுரு இவன்அவன் எனவே
எங்களை ஆண்டுகொண் டிங்கெழுந் தருளும்
மதுவளர் பொழில்திரு வுத்தர கோச
மங்கையுள் ளாய்திருப் பெருந்துறை மன்னா
எதுஎமைப் பணிகொளு மாறுஅது கேட்போம்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே[1]

என்று கூறி விளக்குகிறார். எனவே, திருக்கோயில் வழிபாடு பிள்ளைமை வழிபாடன்று. அது, வழிபாட்டின் முதிர்ந்த நிலை.

வழிபாட்டின் பயன்

வழிபாடு என்பது ஒரு நுண்ணிய கலை நிரம்பிய அருளார்ந்த உயிர்க்கு உதவும் உணர்வுப் பயிற்சி, சிந்தனை யாலன்றி அறிவில்லை. மனம் வளர்வதற்குரிய இந்த உயர் வழிபாட்டு நெறி உலகில் உண்மையில் வளர்ந்தால் மனித குலத்தினிடையில் அன்பு பெருகி வளரும், அமைதி தழுவிய வாழ்க்கை மலரும்; போர் ஒடுங்கும்; புண்ணியம் பெருகும்; சிறைச்சாலைகள் குறையும், அறச்சாலைகள் வளரும். இத்தகு உயர்ந்த வழிபாட்டினை ஒருமை உணர்வுடன் நிகழ்த்துதல் வேண்டும். மனம் இயல்பில் அலையும் தன்மையது. “சென்றவிடத்தாற் செலவிடாஅது”[2] என்பார் திருவள்ளுவர் அலைகின்ற மனத்தை ஒருமைப்படுத்துதல் வழிபாட்டின் முதற்படி “ஒன்றியிருந்து நினைமின்கள் உந்தமக்கு ஊனமில்லை”[3] என்பார் திருநாவுக்கரசர், “ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்”[4] என்பார் வள்ளலார், அண்ணல் நாமத்தை ஐந்தெழுத்தை வைத்த மாநிதி என்று எண்ணுதல் இன்ப உணர்வை நல்கும். அண்ணல் திருநாமத்தை எண்ணி

  1. திருவாசகம், திருப்பள்ளியெழுச்சி, 7.
  2. குறள், 422.
  3. திருநாவுக்கரசர், நான்காந்திருமுறை, 781.
  4. திருவருட்பா, தெய்வமணி மாலை, 8.