பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/51

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமது நிலையில் சமயம் சமுதாயம்

47


மலரிட்டுப் போற்றுதல், உலகம் முழுவதையும் பால் பொழிந்து வளர்த்துக் காப்பாற்றும் பசுவிற்கு வாயுறை அளித்தல், உண்ண வேண்டியவர்களுக்கு உணவளித்தல், இனிய வார்த்தைகளைக் கூறுதல் இவையனைத்துமே சமய வாழ்க்கையின் படிகள் என்று திருமந்திரம் நமக்கு வழி காட்டுகிறது.

யாவர்க்கு மாம்இறை வற்கொரு பச்சிலை
யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை
யாவர்க்கு மாம்.உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே?[1]

என்பது திருமந்திரம்.

திருமூலர் காட்டும் சமய வாழ்க்கையில் கடவுட் பணியும் கடவுட் பணியின்றி உயிர் நலங்காக்கும் பணியும் இருப்பதறிந்து வாழ்க்கையில் மேற்கொள்ளத்தக்கது.

சமய வாழ்க்கை-வழிபாட்டுணர்வில் வளர்ந்த வாழ்க்கை அது பணிமயமானது. பணி என்பது ஓர் உயர்ந்த சொல். ஆனால், இன்று அந்தச் சொல் மிகச் சாதாரணமாக உலகியலில் சொல்லப்படுகிறது பணியாள், பணிமனை என்று. பணி, தன்முனைப்பு இன்றிச் செய்யப் பெறுவது: உயர்வு தாழ்வு நோக்கின்றிச் செய்யப் பெறுவது; யாரிடமும் பணிந்து செய்வது. பயன் கருதாது செய்வது. பணி செய்கின்றோம் என்ற செருக்கு உணர்வின்றிச் செய்வது பணி. அங்ஙனம் செய்யப்பெறுபவையே பணிகள். சமய வாழ்க்கையின் நிறைவு, பணியில் தெரியும்; அத்தகு பணிகள் செய்யும் பண்பில் நாம் ஒவ்வொருவரும் வளர வேண்டும்; நம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

தொகுப்புரை

இளமையில் திருமுறை உணர்வை ஊட்டி வளர்த்த சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை அவர்களின் கொடை

  1. திருமந்திரம், 109