பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/61

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமது நிலையில் சமயம் சமுதாயம்

57

யாரை உவந்தாக்கியும், இல்லாரை எள்ளி ஒதுக்கியும் பேயாட்டம் ஆடுகிறது. பேயாட்டம், பிரானாட்டம் ஆக முடியுமா? ஆதலால் உய்யும் நெறி அறிந்து உய்தலே சமய நெறி.

இறை வழிபாடு

உயிர், உய்தற்குக் கடவுளை நாடுகிறது. இங்கு உயிரும் உருவமற்றது; உயிர் அடையத் துடிக்கும் ஒரு பெருங் கடவுளும் உருவமற்றதே! இங்குக் கலத்தல் உருவங்கள் அல்ல; உணர்வுகளேயாம். உயிர், உணர்வினால் அவாவி, அவாவி, பேரறிவாகவும் பேராற்றலாகவும் விளங்கும் இறையினை நினைத்தல் மூலம், அந்த அறிவையும் ஆற்றலையும் தன்பால் ஈர்த்துத் தன்னை நிறைவுபடுத்திக் கொள்ளும் சாதனையே வழிபாடு. இஃதோர் அறிவுப் பயிற்தி!! உணர்வுப் பழக்கம்! இஃது எளிதில் கைவருவதன்று; அரிதில் முயன்று அடையக்கூடிய சாதனை. பன்னாள் அரன்தனை அர்ச்சிக்கில் சற்றே மெய்ஞ்ஞானம் மிகும். உணர்வுப் பயிற்சி எளிதில் அமையாத தொன்று. அதனால், உணர்வுப் பயிற்சியினை நோக்கமாகக் கொண்டு தொடக்க நிலையில் உருவப் பயிற்சி வழங்கப் பெறுகிறது.

உருவமற்ற ஒன்று, அனுபவத்தைப் பெறவேண்டு மானாலும், அனுபவத்தைத் தரவேண்டுமானாலும் உருவம் பெறுதலைத் தவிர வேறுவழியில்லை. காதல், உருவமற்றது. ஆனால் உருவமைதியில் காதல் நிகழும் பொழுதுதான் இன்பம் கிடைக்கிறது. இதனால் காதலுக்கு உருவமில்லை என்பதும், காதலிப்பவர்க்கு உருவம் வேண்டும் என்பதும் பெறப்படுகின்றன. அதனாலன்றோ வள்ளுவம், காதலர் இருவர் பிணைப்பிற்கு உடம்பு-உயிர்ப் பிணைப்பை உவமை ஆக்கிற்று!... உடல் இன்றேல் உயிர்க்கும் துய்ப்பில்லை; உயிர் இன்றேல் உடலுக்கும் துய்ப்பில்லை என்பது தானே பொருள். உருவ வழிபாட்டுக்கு இஃதொரு தத்துவம். உயிர், உருவ அமைதியுடைய உடலினைப் பெற்றே துய்ப்பினைப் பெறுகிறது. அஃது உருவத்தை இழக்குமானால் துய்ப்பில்லை.