பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/66

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


எய்தியசீர் ஆகமத்தில் இயம்பியபூ சனைக்கேற்பக்
கொய்தமல ரும்புனலும் முதலான கொண்டணைந்தார்[1]

என்றும்,

சிந்தை நியமத்தோடும் செல்கின்றார் திருமுன்பு[2]

என்றும் கூறுவதால் அறியக்கிடக்கிறது. இதே திருக்கோயிலில் கண்ணப்ப நாயனார் பத்திமை நெறியில் அன்பு மேலிடத் தாமே வழிபாடு செய்கிறார். ஆகத் தாமே வழிபாடு செய்து கொள்ளும் உரிமை இருந்தமை பெறப்படுகிறது. சிவகோசரி யாருக்கு எழுந்த ஐயம் கூட யார் பூசித்தார்? என்பது அல்ல; கண்ணப்பர் பூசனையில் புலால் சிந்திக் கிடந்தமையால் “நெறியல்லா நெறியில் (சிவகோசரியார் பார்வையில்) பூசனை செய்தது யார்? என்பதே சிவகோசரியாருக்கு இறைவனே பதில் சொல்லித் தேற்றிக் கண்ணப்பர் பூசனையே தனக்கு உவப்பாக இருந்தது என்பதனை,

அவனுடைய வடிவெல்லாம் நம்பக்கல் அன்பென்றும்
அவனுடைய அறிவெல்லாம் நமைஅறியும் அறிவென்றும்
அவனுடைய செயலெல்லாம் நமக்கினிய வாம்என்றும்
அவனுடைய நிலை இவ்வா றறிநீ[3]

என்று அருள் செய்து விளக்கியுள்ளார். ஆதலால், திருக்கோயிலில் உள்ள இறைவனை எல்லோரும் சென்று வழிபடுவது தான் சிறந்த சமயநெறி. அதன் மூலம்தான் உயிர்கள் இன்ப அன்பினையும் ஞான அனுபவத்தினையும் பெறமுடியும். அருச்சகர்கள் நாள்தோறும் இறைவன் திருமேனியைப் பூசனைக்குரியவாறு அமைத்து வைப்பார்கள். இஃது, இந்த நூற்றாண்டின் புரட்சியுமல்ல; புதுமையுமல்ல.

திருக்கோயில் நாட்பூசை வரலாறு

திருக்கோயில் நாட்பூசனைக்கு நியமிக்கப் பெற்றவர்கள் ஆதியிற்பெற்ற பெயர் சிவாசாரியார் என்பதே உலகியற்

  1. திருத்தொண்டர் புராணம், கண்ணப்பர், 135
  2. திருத்தொண்டர் புராணம், கண்ணப்பர், 136.
  3. திருத்தொண்டர் புராணம், கண்ணப்பர், 157.