பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/71

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமது நிலையில் சமயம் சமுதாயம்

67


வர்களுக்கும் இந்த முறை இருப்பதனால் ஓரளவு பயனுண்டு. இந்த அருச்சனை முறை தாய் மொழியில் அமைய வேண்டும்.

மொழி எல்லை ஏன்?

சமய நெறிகளுக்கு - பிரார்த்தனைக்கு மொழி எல்லை ஏன்? இசுலாமியர் எந்த மொழியினத்தைச் சேர்ந்திருந்தாலும் அராபிய மொழியில்தானே பிரார்த்தனை செய்கிறார்கள். ஆம்! அஃது உண்மையே. இசுலாமிய சமயம் அராபிய மொழி வழிப்பட்ட சமுதாயத்தில் தோன்றிற்று. பிற மொழி வழிப்பட்ட இனங்களிலும் அது பரவியது. ஆதலால் இசுலாமியர் தமது சமயம் தோன்றிய மொழியையே விரும்பி மேற்கொண்டிருக்கின்றனர். அப்படி விரும்பி மேற்கொள்வது மரபுவழி வழக்கமுமாகிவிட்டது; அதற்குத் தடையுமில்லை. நம்முடைய சமயம் நம்முடைய தாய்மொழியில் தோன்றி வளர்ந்ததே தவிரப் பிறமொழியில் தோன்றி வளர்ந்ததில்லை. சேக்கிழார் “தமிழ் வழக்கு“[1] என்றே நமது சமயத்தைக் குறிப்பிடுகின்றார். ஆதலால் நம்முடைய சமயம் தோன்றி வளர்ந்த முறையிலேயே நமது பிரார்த்தனைமொழி இருப்பது தான் நியாயம். மேலும், இன்று அர்ச்சனை மொழியாக இருக்கும் சமஸ்கிருதம், உண்மையில் நமது சமய மொழியாக இருந்திருக்குமானால் அதை எல்லோரும் கற்றுத்தெளிவதற்குரிய வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். அங்ஙனம் வழங்கப்படாததோடு மட்டுமன்றித் தடையும் விதிக்கப்பட்டு வந்திருக்கிறது. இடையில் வந்த மொழி ஆதிக்கமும், சாதி ஆதிக்கமுமே நம்முடைய சமயம் உலகச் சமயமாவதைத் தடுத்து விட்டன. அதுபோல, கிறித்தவ சமயம் லத்தீன் மொழியில் தோன்றி வளர்ந்தது. கிறித்தவர்கள் லத்தின் மொழியில் பிரார்த்திக்கின்றனர். அங்கே லத்தீன் மொழியைப் பயில எல்லோருக்கும் வாய்ப்புண்டு; தடையில்லை. ஆனாலும் மார்ட்டின் லூதர் தோற்றத்திற்குப் பிறகு கிறித்தவ சமயம் பரவியிருக்கும நாடுகளில் அவரவர் மொழியில் வழிபாடு செய்யும் பழக்கம் வந்துவிட்டது.

  1. திருத்தொண்டர் புராணம், திருஞான சம்பந்தர் புராணம், 24,