பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/77

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமது நிலையில் சமயம் சமுதாயம்

73


அனுபவ நிலைக்கு அழைத்துச் செல்வதும் திருமடங்கள் செய்யவேண்டிய பணிகள். இன்று அந்தப் பணிகளைத் திருமடங்கள் செய்யவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. திருமடங்கள் 'தீக்கை' செய்விப்பதையே நிறுத்தி விட்டன. அண்மையில் கரூரைச் சார்ந்த அன்பர் ஒருவர் ‘தீக்கை' பெற்றுச் சிவபூசை செய்யவேண்டும் என்ற விருப்பத்துடன் ஒரு திருமடத்திற்குச் சென்றாராம். அத் திருமடத்தின் படைபரிவாரங்கள் திருமடத்தின் தலைவரைக் கண்டு கொள்ள அனுமதிக்காமலேயே, “இங்கே உங்களுக்கெல்லாம் தீக்கை செய்ய மாட்டார்கள்” என்று சொல்லி அனுப்பி விட்டார்கள். இஃது என்ன கொடுமை? மக்களைச் சந்திக்க - மக்களுக்கு அறிவூட்ட, பக்தியுணர்வை வழங்கத் தோன்றிய திருமடங்கள் இன்று திசைமாறி இருக்கின்றன. ஒரு சில மடங்களில் ஓரளவு மாறுதல் ஏற்பட்டு இருக்கிறதென்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால் அந்த மாறுதலும் கூட வளர்ந்த சமுதாயத்தினருக்குப் பயன்படும் அளவே தவிர, வளர வேண்டிய சமுதாயத்திற்குப் பயன்படத்தக்க வகையில் அமையவில்லை. இந்து சமூகத்தில் எண்பது விழுக்காடு மக்கள் பள்ளத்தில், படுகுழியில் கிடக்கின்றனர். அவர்களுடைய பொறிகளுக்குப் பொருளில்லாமல் போய்விட்டது; புலன்கள் செயலற்றுக் கிடக்கின்றன. வெற்று மனிதர்களாக அரசை நம்பி, ஒரு சில செல்வர்களுடைய தாராள மனப்பான்மையை நம்பி, ஏழைகளாக அவர்கள் செத்துக் கொண்டிருப்பதை நினைத்தாலே நெஞ்சம் வேதனையடைகிறது! ஒருபுறம் வாழ்வாரோடு கூடிக்குலாவிப் பொன்னாடைகளை வழங்கிக்கொள்ளும் இவர்கள் ஏன், புழுதியில் கிடக்கும் மனிதர்களைப் பார்க்க மறுக்கிறார்கள்? ஒரு சமயத்தைச் சார்ந்த மக்கள் அறியாமைப்படுகுழியில் கிடக்கும்பொழுது, அந்த மக்கள் ஞானசூனியர்களாக இருக்கும்பொழுது திருமடங்கள் ஏன் என்ற வினா எழுவது இயற்கைதானே.