பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/82

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நம் திருக்கோயில்களும் உதிரித் தன்மையுடையனவாக விளங்குகின்றன. அவற்றையும் ஒருமைப்பாடுடையனவாக ஆக்கவேண்டும். காலத்தின் எல்லைகளில் செய்த தவறுகளின் காரணமாக இன்று நமது சமய நிறுவனங்கள் சமயச் சார்பற்ற அரசின் ஒரு பகுதியாகப் போய்விட்டன. இதனால், நமது சமயப் பாதுகாப்புப் பணிகளுக்கு உரிய வாய்ப்பு அருகியிருக்கிறது. அறநிலைய அமைச்சர் சமய நிறுவனங்களின் உடைமைகளைப் பாதுகாப்பார்; ஆனால் உணர்வுகளைப் பாதுகாக்க முடியாது. அறநிலைய ஆட்சித்துறை சமய நிறுவனங்களைக் கண்காணிக்கும்; ஆனால் சமயத்தை வளர்க்காது. இது இன்றுள்ள உண்மையான நிலை. நிறுவனங்கள்-உடைமைகள் சமய வழிப்பட்ட சமுதாயத்தைச் சமய வழியில் பாதுகாக்கவும், சமய உணர்வில் பாதுகாக்கவும் உரிய கருவிகளேயாம். உடல் பாதுகாக்கப்படும், உயிர் பாதுகாக்கப்படாது என்று சொன்னால் என்ன பயன்? ஆதலால், திருமடங்கள் திருக்கோயில்களின் இணைப்பு மையமாகப் பல்கலைக் கழக வடிவமைப்பில் ஒரு தன்னாதிக்கமுள்ள பொதுவான அரசின் மேலாண்மைக்கு இசைந்தவாறமையும் வகையில் பேரவைக்கு உருவம் கொடுக்க வேண்டும். அந்த அமைப்பு சமய நிறுவனங்களைப் பாதுகாக்க வேண்டும். இந்த அமைப்பே அவ்வப்போது நமது சமயநெறியில் காணவேண்டிய சீர்திருத்தங்கள் குறித்தும் சமுதாய மற்றங்கள் குறித்தும் சிந்தனைசெய்து தக்கவாறு வழிநடத்த வேண்டும். நம்முடைய மூவேந்தர் காலத்திற்குப் பிறகு நம்முடைய சமய நெறியையும் சமுதாய அமைப்பினையும் பற்றி எண்ணிச் சிந்தித்துத் தக்க மாற்றங்களைச் செய்யும் முயற்சி மேற்கொள்ளப் பெறவில்லை. இங்கொருவர் அங்கொருவராகச் சிந்திப்பவர்கள் சிலர் தோன்றினர். அவர்களில் வடபுலத்தில் இராமகிருட்டினரைத் தொடர்ந்து விவேகானந்தரும், தென் புலத்தில் வள்ளலாரும் குறிப்பிடத்தக்க சிந்தனையாளர்கள். இவர்களுடைய சிந்தனையை வழி வழி வந்த சமய