பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/84

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


களாக நலன்களை நாடிப்பெறும் உரிமையுடையவர்களாக இணைக்கப்பெற வேண்டும். வேறொரு பெயரில் சொன்னால் நம்முடைய சமுதாய மக்கட் கணக்குப் பட்டியலாக அந்த வழிபடுவோர் பட்டியல் அமையவேண்டும். திருக்கோயிலின் ஊர்ச்சபை ஒவ்வொருவரிடத்தும் தொண்டு கொள்ளவேண்டும்; நிதியும் பெறவேண்டும். ஊர்ச்சபையின் தொண்டின் மூலம் கோயிலுக்கும் குடிகளுக்குமிடையேயுள்ள இடைவெளி குறையவேண்டும்; பிரிக்கமுடியாதவாறு நல்றுறவால், பிணைக்கப்படவேண்டும். இந்தத் தொண்டு முறை சிவபெருமானே செய்துகாட்டிய தொண்டுமுறை. இறைவன் உயிர்களைத் தொடர்ந்து சென்று அவற்றைப்பின் தொடர்ந்து நின்று பாதுகாக்கிறான் என்பதைத் திருவாசகம்,

பால்நினைந் தூட்டுந் தாயினும் சாலப்
பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த
செல்வமே சிவபெரு மானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே[1]

என்ற பாடலில் சிறப்பித்துக் கூறுகின்றது.

செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக்
கொங்குண் கருங்குழலி, நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை
அங்கண் அரசை, அடியோங்கட் காரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்[2]

  1. திருவாசகம், பிடித்தயத்து-9
  2. திருவாசகம், திருவெம்பாவை, 17