பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/89

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமது நிலையில் சமயம் சமுதாயம்

85


புதுப்பகுதிக்குக் கண்ணப்ப நாயனாரைப் போற்றும் வகையில் “கண்ணப்ப நாயனார் கண் மருத்துவமனை” என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

தண்டியடிகள் அடிச்சுவட்டில் அவரை அடியொற்றியே திருக்குளங்களைத் துய்மை செய்யும் பணியை மேற்கொண்டிருந்தால் தமிழ்நாட்டில் உள்ள திருக்குளங்கள் தூர்ந்து போயிருக்குமா? வழுக்கும் பாசிதான் வருமா?

திருவிழிமிழலையில் நிகழ்ந்த பஞ்சம் நீக்கும் பணியை அடியொற்றி மேற்கொண்டிருந்தால் நமது நாட்டில் பஞ்சம் வருமா? ஒரு சிலர் “இன்றும் இறைவன் படிக்காசு கொடுத்தால் அந்தப் பணியைச் செய்யலாம்” என்பர். ஆனால் நாம் உறுதியாகக் கூறுகிறோம், “இன்று இறைவன் படிக்காசு தரமாட்டான்” என்று! ஏன்? தரக்கூடாது என்பதன்று. அன்று அப்பரடிகள் மேற்கொண்டிருந்த வாழ்க்கை, ஓடும் செம்பொன்னும் ஒக்க நோக்கிய வாழ்க்கை, பழுதிலாத்துறவு வாழ்க்கை! அவர் மடாதிபதியில்லை. அவரிடத்தில் காசுகள் இல்லை. அதனால் இறைவன் படிக்காசு தந்தான். இன்றைய மடாதிபதிகளிடமோ நிறையச் செல்வம் இருக்கிறது. அதற்கு என்ன செலவு என்றே புரியாதபொழுது இறைவன் எப்படி மேலும் தருவான்? இன்றைய சமய நிறுவனங்களின் வரவு-செலவு, தணிக்கைக்குரியனவாக இருக்கின்றனவே யன்றித் தகுதிக்குரியனவாக இல்லை. ஆட்சிக்குரியனவாக இருக்கின்றனவேயன்றி அறநெறிக்கு இசைந்தனவாக இல்லை. ஆதலால், இறைவன் வழங்கிய பேறுகள் முழுமையாகப் பயன்படுத்தப்பெற்று மேலும் நியாயமான தேவை ஏற்படுமானால் இன்றும் தருவான். ஆதலால் உண்மையில் நம்முடைய சமயநெறி வளரவும், சமுதாயம் மேம்பாடடையவும் நாம் மேற்கொள்ள வேண்டியன திருத்தொண்டர் வரலாற்றின் வழி வாழ்தலும், அவர்களின் நெறி வழிப்பட்ட பணிகளை மேற்கொள்ளுதலுமேயாம்.