பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/96

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


களை நாம் இழந்துவிட்டோம் என்று துயருறா வண்ணம் நமக்கொரு புதுமறை கிடைத்திருக்கிறது.

திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த திருக்குறள், மறைகளை ஒத்தது இல்லை, மறைகளை விஞ்சிய சிறப்புடையது; மறை நூலின் விழுமிய நோக்கமாகிய அறநெறி உணர்த்துகிறது; பொருள் நெறி காட்டுகிறது; இன்ப நிலை எய்த வழி நடத்துகிறது; திருவடிப்பேற்றினை வழங்குவிக்கிறது; கடவுளை வாழ்த்துகிறது; உயிரின் நிலையை உய்த்துணரச் செய்கிறது; அறியாமையை அடையாளம் காட்டுகிறது; ஆன்ற அறிவை வழங்குகிறது; ஆதலால், திருக்குறள் ஒரு மறை நூலே, மறந்தும் வேறுபாடுகளைக் குறிக்காத மறை நூல் அது! அதனாலன்றோ ஒளவையார்,

தேவர் குறளும் திருநான் மறைமுடியும்
மூவர் தமிழும் முனிமொழியும்-கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகம்என் றுணர்[1]

என்று பாடினார்.

திருக்குறள் நமது சமுதாயத்தின் தனிமறை, பொது மறை. இம்மறை வழி நின்று விதித்தன செய்து, விலக்கியன ஒழித்து வாழ்தல் நமது சமய வாழ்க்கை.

உயிர்களின் வளர்ச்சி

மனிதன் ஓர் அற்புதமான தோற்றம். உலகத்தில் கோடானுகோடி உயிரினங்கள் வாழ்கின்றன. அவற்றில் சிலவற்றுக்கே பெயர்கள் காணப்பெற்றுள்ளன. இன்னும் சில, பெயர்கள் பெறவில்லை. உயிர்க்குலத்தின் ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் பல நூற்றாண்டுகள் அது நடைபெறும் என்றே தெரிகிறது. உயிர்க்குலத் தொகுதியினை,

  1. நல்வழி.