பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/98

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மூலம்) ஈரறிவுயிர் உருவத்தை அடைந்து, அதில் முழுமையாகி மரணமடைந்து, வேற்றுருப் பெற்று, மூவறிவுயிராகி, அதில் முழுமையாகி மரணம் அடைந்து வேறுருப்பெற்று நாலறிவுயிராகி, அதில் முழுமையுற்று இறந்து-பிறிதோருருப் பெற்று ஐயறிவுயிராகி அதில் முழுமையடைந்து இறந்து ஆறறிவுயிராகிய மானிடப் பிறப்பை வந்தடைகின்றன.

மானிடப் பிறப்பின் உயர்வு

உயிர் பிறப்பு முறையில் வளர்ச்சியடைந்த-சிறப்புடைய பிறப்பு, மானிடப் பிறப்பே. அதனை அடுத்தது தேவர்நிலை. “அரிதரிது மானிடராய்ப் பிறத்தலரிது”[1] என நூல்கள் பாராட்டும். “வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்”[2] என்று அப்பரடிகளின் அருள் நூல் கூறும்.

பகுத்தறிவின் பயன்

மனிதன் ஆறாவது அறிவையுடையவன். அதாவது பகுத்தறிவுடையவன். பகுத்தறிவு என்பது ஒரு சிறந்த கருவி. பகுத்தறிவாவது “நல்லதன் நலனும் தீயதன் தீமையும்”[3] அறிந்து, ஏற்றும் விலக்கியும் ஒழுகுதல். உலகியல், குப்பை கூளங்கள் நிறைந்ததே. ஆயினும், முத்துக்கள் இல்லையென்று கூற முடியாது. குப்பை கூளங்களை விலக்கி முத்துக்களை ஏற்பதே பகுத்தறிவின் பயன். பகுத்தறிவு முறையாகத் தொழிற்பட வேண்டுமாயின் சிந்தனைக்குத் தளைகள் பூட்டக்கூடாது. அதாவது, “இது முன்னோர் வழக்கம்; இது அந்த ஞானி கூறியது; இது இந்த ஞானி கூறியது; இதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் பாவம், நரகம் கிடைக்கும்; இதை ஏற்றுக் கொண்டால் மோட்சம் கிடைக்கும்; இதனை ஏற்றுக் கொள்ளத் தவறினால் பலர் ஏசுவர்” என்பன போன்ற இன்னோரன்ன ஆசைகளுக்கும் அவலங்களுக்கும் பழக்க வழக்கங்களுக்கும் அடிமைப்படுதல் கூடாது.

  1. ஒளவையார் தனிப்பாடல்.
  2. திருநாவுக்கரசர், நாலாந்திருமுறை, 784,
  3. புறம், 29.