பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/102

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


திருமுன்பு ஏற்பட்டிருந்த பழுதுக்குத்தான் (புலால், எலும்பு கிடந்தமைக்குத்தான்) பவித்திர பூசை செய்தாரே தவிர, மற்றவர் தீண்டியதற்குரிய பிராயச்சித்தம் செய்ததாகப் பெரிய புராணத்தில் இல்லை. முடிவாக “விதி முறைப்படி செய்யப்பெற்ற சிவகோசரியார் பூசையிவிட, கண்ணப்பர் பூசை சிறப்புடையது, உவப்புடையது, நனிசிறந்தது”27என்று காளத்தியப்பர் அருளிச் செய்தமையை எண்ணிப் பார்த்தல் வேண்டும். ஆதலால் சிவாச்சாரியார்கள் திருக்கோயிலுக்குள் எழுந்தருளியிருக்கும் பெருமானை ஆன்மார்த்தமாகவும் வழிபடலாம்; பரார்த்தமாகவும் மற்றவர்களுக்குச் செய்விக்கலாம். திருக்கோயிலில் நாள் பூசையைச் சிவாச்சாரியார்கள் செய்து வைத்து, ஆன்மார்த்தமாக வழிபட வருபவர்களுக்கு வழிபாடு செய்துகொள்ளத் தக்கவாறு வைத்தலே, சிவாச்சாரியார்களுடைய கடமை. இக்கருத்தினைத் திருக்கோயிலுக்கு அமைந்துள்ள தலபுராணங்களும் வலியுறுத்துகின்றன. இராமன் பூசித்த திருத்தலங்கள் “திருஉசாத்தானம்”28 முதலிய பல; பாண்டவர் ஐவர் பூசித்தவை “திருமண்ணிப் படிக்கரை” முதலிய பல; வாலி பூசித்தது “வாலீச்சுரம்” என்றெல்லாம் திருத்தல புராணங்கள் உள்ளன. இவ்வாறு இவர்கள் பூசித்த செய்திகள் திருமுறைகளில் இடம்பெற்றுள்ளன. இவை மட்டுமா? ஓரறிவுயிர்கள் முதல் ஐயறிவுயிர்கள் வரை பூசித்துள்ளன; திருவானைக்காவில் யானையும் சிலந்தியும் பூசித்துள்ளன. எறும்பு பூசித்த திருத்தலம் திருவெறும்பியூர் நண்டு பூசித்தவூர் திருநின்றவூர். பசு பூசித்த தலம் திருவான்மியூர், புள் பூசித்த திருத்தலம் புள்ளிருக்கு வேளுர். இவ்வாறு தல வரலாறுகள் இந்த உண்மையைக் கூறுகின்றன. இச்செய்திகளை வள்ளற்பெருமானும் எடுத்துக் கூறி நடத்துகிறார்29. எனவே தீக்கை பெற்றவர்கள் - தகுதியுடையவர்கள் - விரும்புகிறவர்கள் ஆன்மார்த்தமாகத் திருக்கோயிலுக்குள் எழுந்தருளியுள்ள