பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/122

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தொடர்ந்தாற் போன்ற வளர்ச்சிதை மாற்ற ரீதியான பரிமாற்றம் கொள்வதேயாம்”10 என்று மார்க்சியம் கூறுகிறது. எனவே சைவ சித்தாந்தமும் மார்க்சியமும் உயிர்கள் கடவுளால் படைக்கப்பெற்றவையல்ல என்ற அந்த அளவில், ஒத்த கருத்துடையன.

உயிர்கள் படைக்கப்பட்டன என்றால் உயிர்களின் குறைகளுக்கும் நிறைகளுக்கும் கடவுளே பொறுப்பாளியாகின்றான் என்ற கருத்து உருவாகும். அப்படியானால் இந்த உலகில் இன்று சுயநலக்காரர்களால் ஏற்பட்டுள்ள சாதி வேற்றுமைகள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் கடவுளின் ஏற்பாடுகள் என்றாகிவிடும். கடவுள் குறைவிலா நிறைவு; கோதிலா அமுது; உயர்வற உயர்ந்த உயர்வு. இயற்கை நியதியின் பாற்பட்ட பரிணாம வளர்ச்சியில் குறை, நிறையாக மாறி வளரும். ஆனால் நிறையிலிருந்து குறை தோன்றாது குறைவிலா நிறையாகிய பரம்பொருள் குறையுடைய உயிர்களைப் படைத்தான் என்பது ஏற்புடையதன்று; சைவ சித்தாந்தத்தின் கடவுட் கொள்கைக்கும் உடன்பட்டு வராது. கடவுள் உயிர்களைப் படைத்தான் என்ற கொள்கை பிற்போக்கு வாதிகளுக்கு வெற்றி கிட்டியது போலாகும். ஏழைகள் “கடவுளின் இந்த ஏற்பாட்டை மீறக்கூடாது; மீறினால் பாவம்; நரகம் கிடைக்கும்” என்று அச்சம் கொண்டு மீளாத் துயரத்தில் ஆழ்வர். சைவ சித்தாந்தம், உயிர்கள் படைக்கப்பட்டவையுமல்ல; தோன்றியவையும் அல்ல; அழியக் கூடியவையுமல்ல என்று கூறுகிறது. இக்கருத்து வளரும் அறிவியல் உலகத்திற்கு இசைந்த கருத்து. அதுமட்டுமன்று, முற்போக்குத் தன்மையுடையதுமாகும்.

அறிவும் அறியாமையும்

உயிர் தன்னுடைய வாழ்க்கையில் பரிணமித்து வளர அறிவு தேவை என்கிற கருத்தில் சைவ சித்தாந்தத்திற்கும்