பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/123

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆலயங்கள் சமுதாய மையங்கள்

111


மார்க்சியத்திற்கும் உள்ள வேற்றுமையின் அளவு குறைவு. சைவ சித்தாந்தம் இயல்பாகவே உயிர் அறியாமையில் இருப்பதாகவும் இந்த அறியாமையினால்தான் சமுதாயப் பொதுமைக்கு எதிரான “நான்”, “எனது” என்கிற சர்வாதிகாரத் தன்மையுடைய தனித்தன்மை - பொதுமைக்கு எதிரான தனிவுடைமை ஆகிய சொற்களும், சொற்கள் வழிப்பட்ட உணர்வுகளும் முறையே கால் கொள்கின்றன என்கிறது. அறிவியல் உலகம் வளர்ந்து வருவதால் பொருளுற்பத்திக் கருவிகள் எளிமையாக்கப்பெற்று, குறைந்த நேரத்தில், குறைந்த செலவில், குறைந்த சக்தியில் அதிகப் பொருள்கள் உற்பத்தி செய்து குவிக்கக் கூடிய காலமிது. அதோடு நுகரும் பொருள்களை - பணமதிப்புப் பொருள்களாக அல்லது சொத்தாக மாற்றுவதற்குரிய வாய்ப்பும் வளர்ந்துவிட்டது. இந்தச் சூழ்நிலையில் மனிதன் கூடித் தொழில் செய்தல், கூடி உண்டு மகிழ்தல் என்ற மனப்போக்கிலிருந்து விலகி, தனி மனித உருக்கொள்கின்றான்; தனி உடைமை ஆர்வத்திற்கு வித்திடப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில்தான் “நான்”, “எனது” என்ற மனிதகுலப் பண்பாட்டுக் கொல்லியான நச்சுணர்வுகள் “நான்”, “எனது” என்ற சொற்கள் மூலம் வெளிப்படுகின்றன.

சித்தாந்தச் சமயச் சாத்திரங்களும் “நான்”, “எனது” என்பன அற்ற நிலையே அறநிலை என்று கூறும். நற்றமிழ்க் குமரகுருபரர்-

“............. நற்கமலை
ஊரில் குறுகினேன் ஓர்மாத் திரையள(வு) என்
பேரில் குறுகினேன் பின்”11

என்று இலக்கண வடிவில் நயம்பட இதை எடுத்துரைத்தார். அதாவது “சீவன்”, “சிவன்” ஆயிற்று என்பது கருத்து. சீவன், சிவத்தன்மையடைந்த நிலை “நான்” “எனது” அற்ற நிலை.