பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மனிதநேய மாமுனிவர்
குன்றக்குடி அடிகளார்
அமுதன் அடிகள்

சிறந்த தவச் செல்வரும் சிந்தனையாளருமாகிய தவத்திரு குன்றக்குடி அடிகளார் நம் காலத்து வாழ்ந்து அண்மையில் (16.1.1995) மறைந்தவர். சாதி, சமய, மொழி, கொள்கை வேறுபாடுகளைக் கடந்தவராக எல்லா மக்களுடனும் மனித நேயத்துடன் பழகியவர். மனித நேய ஒருமைப்பாட்டைத் தனது இலட்சியமாகக் கொண்டு அதை மக்களிடையே பரப்பிட அயராமல் உழைத்தவர்.

‘உலகத்தை அறிந்து கொண்டு அதற்குள் வாழ்ந்து, தங்களையும் உலகத்தையும் ஒருசேர வளர்த்துக் கொள்வதே ஆன்மிகம்’ என்பார் அவர்.

‘ஆன்மிகம் மனிதத்தின் விழுமிய பயன் ஆன்மிகத்தின் மறுபெயர்தான் மனித நேயம்: ஆன்மிகம் பகுத்தறிவுக்குப் புறம்பானதல்ல; ஆன்மிகம் ஞானம்; ஆன்மிகம் உலகம் தழீஇயது’ என்றும் உறுதியாக நம்பினார் அடிகளார்.

ஆன்மிகத்தில் சிறந்த மனிதர்கள் சமாதானத்தின் காவலர்கள். ஆன்மிகம் எல்லோரையும் வாழவைக்கும் என்பது அடிகளார் கருத்து.

மனித உள்ளங்களை இன்ப அன்பின் விளைநிலமாகத் தகுதிப்படுத்தி, பக்குவப்படுத்தும் தத்துவத்திற்கு - வாழ்க்கை முறைக்குச் ‘சமயம்’ என்பது பெயர் என அடிகளார் கூறுவார்.

‘மனிதகுலம்’ ஒன்றே என்னும் சுருதியில் மாறுபாடுகள் இல்லை. ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்பதே சமய நியதி, ‘நீதி’ என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார் அடிகளார்.

மதம் மனிதர்களின் உரிமைகளுக்கு அரண் செய்வதற்கு மாறாக வன்முறையாளர்களுக்கே கைகொடுத்தது. இதன் ‘விளைவாகச் சாதிகள் தோன்றின. பொருளியல் ஏற்றத் தாழ்வுகள் மலிந்தன’ என்பார் அவர். ஆனால், ஆன்மிகம் தன்னலமற்றது. ஆன்மிகம் மற்றவர்களுக்கு உதவுவதில் முந்தும், ஆறுதல் தரும். இவ்வான்மிகத்தில் தாமே வாழ்ந்து பிறருக்கும் அவர் எடுத்தோதினார்.