பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/150

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உணர்வுடன் மற்றவர்களுக்கு மணம் வழங்குவதே அவற்றின் வாழ்க்கை. மணம் தந்து முடிந்தவுடன் அவற்றின் வாழ்க்கை முடிந்து விடுகிறது. மரங்கள் கனிகளைப் பழுக்கச் செய்கின்றன! கனிகளின் நோக்கம் மற்றவர்களை வாழ்விப்பதே. மற்றவர்களுக்கு வாழ்வு தகுதலே வாழ்க்கையின் குறிக்கோள்; முடிவு! வாழ்வாங்கு வாழ்தல் ஓர் அரிய கலை. அறிவார்ந்த சதுரப்பாடு. வாழ்க்கையென்பது கட்டி முடிக்கப்பட்ட மாளிகையன்று; நாமே ஒவ்வொரு நொடிப்பொழுதும் நம்முடைய உணர்வால், எண்ணத்தால், செயற்பட்டால் வாழ்க்கையைக் கட்டுமானம் செய்து கொண்டிருக்கின்றோம். தான் இருந்து வரும் இல்லத்தைத் தானே தூக்கிச் செல்லும் நத்தையினத்தைப் போல நம் வாழ்வை, நம் வாழ்வின் வெற்றி தோல்விகளை - இன்ப துன்பங்களை நாமே சுமந்து செல்லுகின்றோம். “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்ற சங்க நூற்கருத்தும் ஒப்பு நோக்கத்தக்கது.

வளமான வாழ்க்கைக்கு ஒவ்வொரு மனிதனும் ஒருங்கிணைந்த அனைத்தும் நலமுடன் இயங்குகின்ற ஒரு முழுமையான நிலையை எய்திடுதல் வேண்டும். அதாவது சிந்தனை நலம், புத்தியில் தூய்மை, மன நலம், புலன்களில் செம்மை, பொறிகளில் தூய்மை, உடல் நலத்திலும் உயிர் நலத்திலும் மிகக்குயர்ந்த மேம்பாட்டு வாழ்க்கை ஆகியன தேவை. அப்பொழுதுதான் வளமான வாழ்க்கையைக் காண முடியும். வாழ்வு முன்னேற வேண்டுமானால் உடலுக்குள்ளே அமைந்த உயிர் அல்லது ஆன்மா, பூரண வளர்ச்சி பெற வேண்டும்.

ஆன்மா, நலம் எய்துவதற்காக எடுத்துக்கொண்ட சிறந்த கருவி உடம்பு. உடல், அகநிலைக் கருவிகளும் புற நிலைப் பொறிகளும் பொருத்தப் பெற்ற ஒரு சிறந்த இயங்கு கருவி. உடல், பேணிக் காக்கப்படவேண்டிய ஒன்று. எல்லா நலத்திற்கும் உடல் நலம் அடிப்படை, அதனால்தான் திருமூலர் “உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே!” என்று