பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/151

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆலயங்கள் சமுதாய மையங்கள்

139


அருளிச் செய்தார். உடம்பை வளர்த்தலாவது உடம்பின் பயன்பாட்டுத் திறனைப் பயன்படுத்துதல் மூலம் பெருக்கி வளர்த்துக் கொள்ளுதல் என்பதாகும். இன்று நம்முடைய மனிதகுலத்தின் மூளையாற்றல், உடலாற்றலில் பதினேழு விழுக்காடு கூடப் பயன்படுத்தப் பெறவில்லை என்று கூறுகின்றனர். வாழ்க்கையை ஓர் உயர் குறிக்கோளை நோக்கி மேலும் மேலும் புதிய புதிய வேலைகளை எடுத்துப் பயிற்று வித்துக் கொண்டு முன்னேறுகிற பழக்கம் அருகியே காணப்படுகிறது. மூலப் பொருள்களுக்கானாலும் சரி, மனிதனுக்கானாலும் சரி, இயல்பில் மதிப்பு குறைவு தான்! மனிதனின் ஆற்றலும் அறிவுத்திறனும் இயற்கை மூலப் பொருள்களோடு கொள்ளும் படைப்பாற்றல் மிக்க உறவின் மூலம் அப்பொருள்களுக்குப் பன்மடங்கு மதிப்பு உயர்கிறது; படைக்கின்ற மனிதனும் மதிப்பில் உயர்கின்றான். மனிதகுல வரலாற்றை உயிர்ப்புடன் இயக்கி வளர்ப்பவன் ஆற்றல் படைத்த மனிதனே என்பதை மறந்துவிடுவதற்கில்லை. இன்று நம்முடைய உடம்பாற்றலை முழுமையாகப் பயன்படுத்தாத நிலையிலேயே நாம் வாழ்கின்றோம். இன்னும் சிலர் சுவைக்கும் கவர்ச்சிக்கும் இரையாகி உடம்பையே பழுது செய்துகொண்டுள்ளனர். நோய்க்கு இரையாகி நொந்து நொந்து அழுகின்றனர். உடலுக்கு நோய் இயற்கையன்று; செயற்கையேயாம். அதாவது நோய் மனிதனின் படைப்பேயாம். நெறிமுறை பிறழ்ந்த வாழ்க்கையின் காரணமாகவே நோய் உடம்பில் இடம் பிடிக்கிறது. உடல் உழைப்புக்குத் தேவையான உணவும் ஓய்வும் கிடைத்தால், உடல் நன்றாக இயங்கும். தூய்மைக்கேடு இல்லாத காற்றும் தண்ணீரும் மானுட வாழ்க்கைக்கு இன்றியமையாதவை - நல்லுடல், நல்வாழ்க்கைக்கு இன்றியையாதவை. இந்த உடம்பைக் கருவியாகக் கொண்டே உலகத்தை இயக்கவேண்டியிருக்கிறது; வையகத்தில் வாழவேண்டியிருக்கிறது; திருவருளைப் பெறவேண்டி இருக்கிறது. அனைத்துக்கும் இந்த