பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/160

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வாழ்பவர்கள், சென்ற கால வரலாற்றின் ஈட்டங்களை இழக்காமல் பாதுகாக்க வேண்டும்; இழப்புகளை ஈடுசெய்ய வேண்டும். தம் வாழ்நாட்கால அளவுக்கு வளர்த்துக் கொண்டு வந்து தந்துள்ள வளத்தை-நாகரிகத்தைப் பாதுகாக்கவேண்டும். அதோடு காலத்தினால் தேவைப்படும் புதியனவற்றைச் சேர்த்து வளப்படுத்தவேண்டும். அடுத்த தலைமுறையைத் தோற்றுவிப்பதன் மூலம் மானுடத்தின் வரலாற்றுக்குத் தொடர்ச்சி தரவேண்டும். இதற்குத் தேவை நன்மக்கள். மனையறம் வாழ்வோர் அனைவருக்கும் மக்கட் பேறு இயற்கை. ஆனால், நன்மக்கட்பேறு, மனை நலத்தில் சிறந்தோர்க்கே உரியது.

“மங்கல மென்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கள் பேறு”

என்பது திருக்குறள்,

நன்மக்கட்பேறு கிடைத்தாலும் அதனை முழுமை நலம் சான்றதாக வளர்த்துப் புகழ் கொள்ளுதல் வேண்டும். இதனை மக்களின் மேல் வைத்துத் திருவள்ளுவர்,

“மகன்தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனும் சொல்”

என்றார். தலைமுறை வரலாற்று ஆய்வுக்குக், காலத்தால் முந்தியோர் எடுத்துக்கொள்ளப் பெறுவர். குடும்ப வளர்ச்சிக்கு அக்குடும்பத்தின் கடைசித் தோன்றல் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுவர். முன்னோரை வைத்துக் கொள்ளும் பெருமை, தான் ஈட்டாதது. தன்னுடைய அடுத்த தலைமுறையைக் கொண்டாடும் பெருமை தானே ஈட்டியது என்பதறிக. ஆதலால், வாழ்க்கை வளமாக அமைய நன் மக்கள் தேவை.

வாழ்க்கை வளமாக அமையப் பொருள் தேவை. இது வரையில் சொல்லி வந்தவை அனைத்தையும் அடையவும்,