பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/165

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆலயங்கள் சமுதாய மையங்கள்

153


தன்மையுடையோராக வாழ்தல். பெருந்தன்மையாவது சிறியன சிந்தியாமை, சின்னத்தனமான காரியங்கள் செய்யாமை, மற்றவர்க்குத் தீங்கு செய்யாமை, புறங்கூறாமை, மற்றவர் பால் குற்றங்காணுதலைத் தொழிலாகக் கொள்ளாமை. இன்னோரன்ன இயல்புகளைக் கொண்ட வாழ்க்கை பெருமை நிறைந்த வாழ்க்கையாகும். அதோடு செயற்கரிய செயல்களைச் செய்யவேண்டும். வாழ்க்கையில் பலர் இயல்பாயமைந்த, எளிதில் செய்யக்கூடிய காரியங்களைக் கூடச் செய்யாமல் அல்லற்படுவர். தாம் அல்லற்படுவதோடு மட்டுமின்றித் தம்மைச் சார்ந்தோரையும் அல்லற்படுத்துவர். தமது வாழ்க்கைக்குரிய உணவைக்கூட உழைத்துப் பெறமுடியாமல் பிச்சை ஏற்றல், களவு செய்தல் முதலிய இழிசெயல்களைச் செய்வர். அதனால், மேலும் மேலும் துன்புறுவர். சிலர் தாம் வாழ்தலோடும் தம்மைச் சார்ந்தோரை வாழ்வித்தலோடு மன்றி எல்லாருக்கும் இன்பம் சேர்க்கும் உயர்குறிக்கோளைக் கொண்டு உழைப்பர்; பெருமைக்குரிய காரியங்களைச் செய்வர். காலத்தை வென்று விளங்கும் சாதனைகளைச் செய்வர். இத்தகையோராலேயே வையகம் புகழ் பெறுகிறது. வரலாற்றுப் புகழ்மிக்க சாதனைகளைச் செய்வோராயினும் எளிமையும் அடக்கமும் பூண்பர்.

இத்தகு பெருமையுடையோராக வாழ்தல் வளமான வாழ்க்கைக்குத் துணை செய்யும். பெருமை, நாமே முயன்று பெறக்கூடியது. பிறர் தரக்கூடிய தன்று; கடையில் வாங்கக் கூடிய சரக்குமன்று. நம்மைச் சுற்றியிருக்கும் சின்னத் தனங்களை மறப்போமாக! யார் மாட்டும் அன்பு செய்வோமாக! எண்ணற்ற சாதிகளாலும் மதங்களாலும் பிரிந்து கிடக்கும் மக்களை ஒருமைப்பாடுடையவராக இணைப்பதை உயர் குறிக்கோளாகக் கொள்வோமாக! இந்திய மக்களை வறுமையிலிருந்து மீட்டு ஒரு புதிய பொன்னுலகைப் படைப்பதை உயர் நோக்கமாகக் கொள்வோமாக! சமநிலைச் சமுதாயம் காண்பதே இந்த நூற்றாண்டின் பெருமைக்குரிய

கு.XII.11.