பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/168

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



வளமான வாழ்க்கைக்கு இன்றியமையாதது நோயின்மை. அதாவது பிணியற்ற வாழ்க்கை. நோயென்பது இயற்கையன்று செயற்கை! அதாவது மனிதர்களே வர வழைத்துக் கொள்வது நோய், இயற்கையோடிசைந்து வாழ்ந்தால் நோய் வராது. நமது உடல் எளிதில் நோய் அடைய முடியாத அற்புதப்படைப்பு; ஒரோ வழி நோய் வந்தாலும் தனக்குத்தானே நோய் நீக்கிக் கொள்ளவும், புதுக்கிக் கொள்ளவும் கூடிய ஆற்றலுடையது அமைப்புடையது. ஆயினும் தொடர்ந்து உடலியற்கைக்கு மாறாக அதனை எதிர்த்துத் தகாத வழியில் வாழ்க்கை நடத்துபவர்களே பிணியை வர வேற்றுக் கொள்கிறார்கள். நற்காற்றும் கதிரொளியும் நறுநீரும் உடலுக்கு இன்றியமையாத தேவை. இவற்றை முறையாகத் தூய்மையானதாக உடலுக்குக் கிடைக்கும்படி செய்தால் நோயின்றிப் பல ஆண்டுகள் வாழலாம். ஆதலால், காற்றிலும் கதிரொளியிலும் தோயத் தக்கவாறு உலாவுதல் வேண்டும். உடல் உழைப்புக்குரியது. உழைக்காத உடல் நோய்க்கு இரையாதல் தவிர்க்க முடியாதது. ஆதலால், உடம்பு வருந்தத்தக்க அளவுக்கு அதற்கு உழைப்பு கொடுத்தாக வேண்டும். வீடு - அலுவலகம் அலுவலகம் - வீடு என்றிருப்பவர்கள் நோயின்றி வாழ்தல் எங்ஙனம்? ஒரு நாளைக்குக் குறைந்த அளவு எட்டு கிலோ மீட்டர் தூரமாவது நடக்கவேண்டும். அல்லது வீட்டுத் தோட்டத்தில் தங்கள் வாழ்க்கைக்குப் பயன்படக்கூடிய காய்கறித் தோட்டம் அமைத்தாவது வேலை செய்ய வேண்டும். தங்கள் வேலைகளைத் தாங்களே செய்து கொள்ள வேண்டும்.

அடுத்து, முறையாகக் குறித்த காலத்தில் உடலுக்கு நலம் பயக்கும் உணவை உண்ணவேண்டும். உடலுக்கு, இயற்கை அன்னை தரும் உணவு நல்லது. உணவில் அரிசியைக் குறைத்து, காய், கனி, கீரை, பருப்பு வகைகளை மிகுதியாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இத்தகைய உணவை, உடலின் தேவை கருதி உண்ண வேண்டும். உடலின்