பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/169

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆலயங்கள் சமுதாய மையங்கள்

157


தேவையாவது உயிர் வாழ்தலுக்குரிய அடிப்படைத் தேவை. உழைப்புக்கேற்ற உணவு உண்ண வேண்டும். உடலுக்குத் தீங்கு பயக்கும் குடித்தல், புகைத்தல் போன்றவைகளை அறவே விலக்க வேண்டும். உடல் நிலையைப் பாதிக்கக் கூடிய உணர்ச்சிகளைக் கொள்ளுதல் கூடாது. விருப்புவெறுப்பு, சினம், பதற்ற நிலையடைதல் ஆகியன வாழ்க்கைக்குத் துணை செய்யாதவை. காரிய சாதனைக்கும் கூட ஆகாதவை. நோயின்றி வாழ்தல் வளமான வாழ்க்கைக்கு இன்றியமையாதது. உடலை அலட்சியப்படுத்தக்கூடாது. “உடம்பார் அழியின் உயிரார் அழிவர்” என்ற திருமந்திரத்தை அறிக. உடலை வளர்த்து உயிரை வளர்த்திடுக! காற்றும் கதிரொளியும் எளிதில் புகுந்து வெளியேறும் இடத்தில் இருந்து பணி செய்திடுக. நோயின்மைக்கும் இளமைக்கும் முதுகுத் தண்டின் நலம் இன்றியமையாதது. ஆதலால் எப்பொழுதும் நேர் நிற்றல், நிமிர்ந்து நிற்றல், நிமிர்ந்த நிலையில் அமர்ந்து பணி செய்தல் ஆகிய நிலைகளை மேற்கொள்க!

நாள்தோறும் உடலுக்கு உழைப்பினைத் தருக! நன்றாகத் தூங்கக் கற்றுக் கொள்க! நல்ல தூக்கம், உடலியக்கத்தைப் புதுப்பிப்பது; புத்துணர்வுக்கும் புத்துழைப்புக்கும் உடலை ஆயத்தப்படுத்துவது. நல்ல எண்ணங்களாலும் சிந்தனைகளாலும் உள்ளத்தை நிரப்பி, நோயற்ற வாழ்வுக்கு வழி காண்க: கூடி வாழப் பிறந்தார்களிடம் நல்லிணக்கத்தையும் உறவையும் பேணுக! வளமான வாழ்க்கைக்கு நோயற்ற வாழ்வே முதல் திடமான உடல்கொண்டு வளமான வாழ்க்கை வாழ்வோம்!

வாழ்க்கை ஓர் அருமையான கொடை. இந்த வாழ்க்கை முழுவதும் முறையாக வாழ்ந்து முடிப்பது பயனுடையதாக அமையும். புகழ் நிறைந்த வாழ்க்கை, வாழ்நாள் முழுதும் வாழ்ந்தாக வேண்டும். வாழ்நாள் எவ்வளவு என்பதில் இன்னும் வரையறுக்கப்பட்ட முடிவு காணப்படவில்லை. இன்று உலகில் சிலர் 137 வயது வரையில்