பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

நாம்தான் குற்றவாளிகள்’ என்று வருந்தியவர் அவர். எல்லாப் பணிகளையும் விட வறுமை ஒழிப்புப் பணியை முதற்பணி எனக் கருதிச் செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

மனிதர்கள் எப்போதுமே தன்னல உணர்ச்சியோடு செயல்படுவதை உணராதவர் அல்லர் அடிகளார். இத்தன்னல உணர்ச்சியைத் தடை செய்யாமல், மட்டுப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார். ‘ஆசைப்படுவது தவறல்ல. ஆனால், ஆசை அன்பாக மாற வேண்டும். ஏனெனில் ஆசை தற்சார் புடையது’ என்பார் அவர்.

விவசாயப் பொருளாதாரம் விவசாயிகளுக்கு எதிராக அமைந்திருக்கும் நிலை மாற்றப்பட வேண்டியதையும் அவர் வலியுறுத்தினார். இடைத் தரகர்களுக்கு இடமில்லாத விவசாயப் பொருளாதாரம் அமைய வேண்டும் என்பது அவரது கருத்து.

கால்நடை வளர்த்தல், கோழி வளர்த்தல், மீன் வளர்த்தல் போன்றவற்றால் இந்தியாவின் பொருளாதாரத்தை வளர்க்க முடியும் என்பதைப் பற்றியும் அடிகளார் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

இந்தியா சுதந்திரம் பெற்ற பின், படிப்படியாக அது பொருளாதாரத்தில் வளர்ந்துள்ளதை யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால், ஒரு சிலர் செல்வத்தில் திளைக்கவும் பலர் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழவும் பொருளாதார முறை வகை செய்திருப்பதைக் கண்டு மனம் பொங்கினார் அடிகளார். இந்நிலையைப் போக்க நாத்திகம் தவிர்த்த மார்க்சீயத்தைப் பற்றியும் அவர் சிந்தித்தார். மார்க்சீயத்தின் உயிர்க்கொள்கையாகிய ‘உழைப்புக்குத் தகுந்த ஊதியம்’ என்னும் கருத்தும் அடிகளாருக்கு உடன்பாடே மனித உலகத்துக்குச் சீரான வாழ்க்கையை வழங்க வேண்டுமென்ற விழுமிய நோக்கத்துடன் பொதுவுடைமைத் தத்துவத்தை, ஒரு புதிய வாழ்க்கை முறையை உலகத்துக்கு அறிமுகம் செய்தவராகக் கார்ல் மார்க்சைப் பாராட்டி, அவரை ‘மாமுனிவர்’ என அடிகளார் போற்றத் தவறியதில்லை.

எனினும், ஸ்டாலின் போன்றோர் பொதுவுடைமைக் கோட்பாட்டைத் தன்னலத்துக்கு உட்படுத்திப் பயன்படுத்தியதை அடிகளார் ஏற்றதில்லை. இந்தியப் பொருளாதாரத்துக்கு ஏற்றது கூட்டுறவு முறையே என்பதை ஓயாமல் வற்புறுத்தி வந்தார். தாம் குன்றக்குடிப் பகுதியில் மக்கள் மேம்பாட்டுக்காக வகுத்த பொருளாதாரத் திட்டத்தைக் கூட்டுறவு நெறியின் அடிப்படையிலேயே அவர் அமைத்து நன்மை கண்டார்.