பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/174

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஒத்து நின்று ஒழுகுபவரே வாழும் இயல்பினர். ஊருணி நிறைந்த தண்ணீர் போலவும், பழுத்த பயன்மரம் போலவும், நோய் நீக்கும் மருந்து மரம் போலவும் மற்றவர்க்குப் பயன்படுதல் ஒப்புரவறிதலின் சிறந்த செயற்பாடு. மற்றவர்க்கு உளம் நிறைந்த உணர்வில் கைம்மாறு கருதாது உதவி செய்தவனே உண்மையில் வாழ்கின்றான். பிறர்க்கு உதவி செய்யும் நாளே பிறந்த நாளினும் பெருவாழ்வுக்குரிய நாள். ஒப்புரவறிதலில் இன்றைய கூட்டுறவு வாழ்க்கை அமைந்து கிடக்கிறது. ஒப்புரவறிதல் மூலம் ஒருவரின் ஆன்மா வளர்கிறது: உலகம் தழிஇய ஒட்பம் பெறுகிறது. வளமான வாழ்க்கைப் படைப்பிற்கு ஒப்புரவுதான் மிகச் சிறந்த கொள்கை வாழ்க்கை வளமாக அமைய வேண்டுமென்றால் ஒப்புரவு நெறி நின்று ஒழுகுதல் வேண்டும்.

அடுத்து, வளமான வாழ்க்கைக்கு அமையவேண்டிய இன்றியமையாப் பண்பு கண்ணோட்டம். கண்ணோட்டமாவது, தன்னோடு தொடர்புடையார் மாட்டு அன்பு நிகழ்வதை-அவ்வழி நன்மை செயற்படுவதை மறுக்க முடியாதது. இந்த உலகம் அழிந்து போகாமல் இதுவரையில் இயங்கிக் கொண்டிருப்பதற்கே காரணமாக இருப்பது கண்ணோட்டம். கண்ணோட்டமுடையவர்கள் இந்த உலக இயக்கத்திற்கு உயிர்ப்பு நிலையாக இருந்து இயக்குகிறார்கள். கண்ணோட்ட மில்லாதவர்கள் நிலத்திற்கு வீணே சுமையென வாழ்கிறார்கள். பொருளுடைய பாடல் பண்ணோடு பாடப்படும் பொழுது கேட்பதற்கு இன்பமாக இருக்கிறது; மகிழ்ச்சியைத் தருகிறது. அது போலவே கண்ணோட்டம் செய்யக்கூடியவர் களுடைய கண்கள் காண்பதற்கு மகிழ்வைத் தரும், மன நிறைவைத் தரும். கண்ணிற்கு அழகு, கண்ணோட்டமுடையதாக அமைதல் கண்ணோட்டம் செய்வதன் காரணமாகக் காரியங்கள் கெட்டுப் போகாமல் விழிப்பு நிலையிலும் செய்தல் வேண்டும். குற்றங்களைப் பொறுத்து, அன்புகாட்டிக் கண்ணோட்டமுடையவ ராயிருத்தலே வாழ்க்கையின் சிறப்பு.