பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/178

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஆன்மா, கட்டுக்களிலிருந்து விடுதலை பெறுவதோடன்றி நிறைநலம் பெற்று இன்ப அன்பில் திளைத்தலே வீடுபேறு. இன்பம் என்பதும் அன்பு என்பதும் தனிப்பொருட் சிறப்புடைய சொற்கள். இறைவனை “இன்பன்காண் துன்பங்கள் இல்லாதான்காண்” என்று திருமுறை போற்றும், ‘இன்பன்’ என்று சொன்னால் போதாதா? ‘துன்பங்கள் இல்லாதான்’ என்று மீண்டும் கூறியது ஏன்? இன்று நம்முடைய வாழ்க்கையில் இன்பம் என்று கருதித் துய்த்துக் கொண்டிருப்பவைகளில் துன்பக் கலப்பும் இருக்கிறது. அது மட்டுமன்று. என்றும் இன்பமாக இருத்தலுமில்லை; எல்லாருக்கும் இன்பமாக இருத்தலுமில்லை. இறையின்பமாவது யாண்டும் இன்பம்; எப்பொழுதும் இன்பம்; எல்லாருக்கும் இன்பம். துன்பத் தொடர்பேயில்லாத இன்பம். இன்ப நுகர்வு நிகழ அன்பு தேவை. ஞானப் பெருவாழ்வில் கடவுள் இன்பப் பொருளாகவும், ஆன்மா இன்பத்தை நுகரும் அன்புப் பொருளாகவும் விளங்குகின்றன. ஆன்மாவினிடத்தில் விளங்கும் தூய அன்பைத் துய்த்தலில் இறைவனுக்கு இன்பம். இன்ப அன்பினை ஆன்மா அடைவதற்கு அறியாமையே தடை. அறியாமை என்பதற்கு, ஒன்றும் தெரியாமை என்பது பொருளன்று. தத்துவ உலகில் அறியாமை அதாவது நன்மையைத் தீமையாகவும், தீமையை நன்மையாகவும் அறிதல் என்பதாகும். இந்த அறியாமை நீங்குதல் வேண்டும். நல்லதன் நன்மையும் தீயதன் தீமையும் பகுத்து அறிகின்ற அறிவுத்திட்பம் தேவை. தீமையை விட்டொழித்து விலகுவதற்கும் தீமையை எதிர்ப்பதற்கும் துணிவு தேவை. நன்மையைச் சாதிக்கும் திறன் வேண்டும். ஈண்டு நன்மை என்ப்து எங்கும் எல்லோருக்கும் எப்பொழுதும் நன்மையாக இருப்பது. “நன்றுடையான் தீயதில்லான்” என்ற திருமுறை வாக்கை எண்ணி இன்புறுக ஆன்மா, இன்ப அன்பினை அடையப் பத்திமை துணை செய்யும். ஆனால், பக்தி முதிர்ந்து ஆன்மா ஞானத்தை அடைதல் வேண்டும்.