பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/179

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆலயங்கள் சமுதாய மையங்கள்

167


‘ஞானத்தாலன்றி வீடுபேறு இல்லை’ என்பது மெய்கண்டார் வாக்கு. ஞானம் என்பது உயர்வற உயர்ந்த அறிவு; அறியாமைக் கலப்பில்லாத அறிவு; மயக்கங்கள் கடந்த அறிவு. சிந்தையுள் தெளிவதே தெளிவினுட் சிவமாக இறையாகத் தேர்ந்து தெளிவதே ஞானம். இத்தகு ஞானப் பெருவாழ்வே வளம் நிறைந்த வாழ்வு. இந்த அளப்பரும் ஞானமுடைய வளம் பொருந்திய வாழ்வை மண்ணில் காண்போம்!

வளமான வாழ்வு இன்றியமையாதது, ஒவ்வொருவரும் வளமான வாழ்வு வாழவேண்டும். மக்கட் சமுதாயம் முழுதும் வளமாக வாழும் சூழ்நிலை உருவானால்தான் தனிமனித குடும்ப வாழ்க்கைகள் வளமாக அமையமுடியும். மழை பெய்து மண் குளிர்வதுபோல், மண் குளிர்ந்து செடிகள் தழைப்பது போல், சமுதாயம் தழைத்து வளர்ந்தால்தான் தனி மனிதர் வாழ்வு வளமாக அமைய முடியும். மக்கட் சமுதாயம் வளமுடன் அமைய, நாடு நாடா வளமுடையதாக அமைய வேண்டும். வளமான வாழ்க்கை அமைய நாட்டை வளப்படுத்துவோம்! மக்கட் சமுதாயத்திற்கு நலம் சேர்ப்போம்! வையகம் உண்ண உண்போம்! வையகம் உடுத்த உடுப்போம்! வாழ்வித்து வாழ்வோம்! இதுவே நியதி அறம்! ஒழுக்கம்! வளமான வாழ்க்கை!

முற்றும்