பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/185

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடவுளைப் போற்று! மனிதனை நினை!

173


நிற்றல் வழிபாட்டின் பயன்; அதாவது அறிஞனாதல், தொழில் வல்லானாதல், இன்புறுதல் ஆகும். அந்த வழிபாட்டில் பொறி, புலன்களை இயக்கும் மனம், புத்தி, சித்தம் ஆகிய உயிர்களின் தலையாய அறிகருவிகள் ஈடுபடவேண்டும். இவை ஈடுபடாமல், பொறிகளால் செய்யப்படும் வழிபாடு பயனற்றது. மனம் ஆற்றல் மிக்கது. ஓயாத இயக்கத்தன்மை உடையது; விரைந்து தொழிற்படும் தன்மையது. அதனால் தான் மனத்தின் வேகத்தை வளியின் வேகத்திற்கு ஒப்பிடுவர். “வாயு வேகம், மனோ வேகம்” என்பது வழக்கு. உயிர், அரிதல் முயன்று மனத்திற்குச் சிந்தனைக்குரிய -நுகர்தலுக்குரிய நற்செய்திகளைத் தந்துவிடின் மனம், புத்தியின் துணை கொண்டு நன்மை தீமையைப் பகுத்தறிந்து சிந்திப்பதற்குரிய செய்தியினை நிச்சயித்து மனத்திற்குத் திரும்பத் தரும். இந்நிலை அமையாதெனின் உயிர் தன்போக்கில் தொழிற்படும். இந்நிலை, பயன்படாநிலை மட்டுமின்றி, துன்பம் தருவதுமாகும். இந்நிலையில், உயிர் தன்னிச்சைப் போக்குகளை நிறுத்தி, மடைமாற்றி நன்னெறியில் மனத்தைச் செலுத்துதலே-நிறுத்துதலே வழிபாடு!

ஆக, உயிர், கடவுளுக்குச் செய்யும் வழிபாடு கடவுளுக்கு உரிமையுடைய ஒரு காணிக்கையன்று! உயிர், கடவுளை வழிபடுதலால், கடவுளுக்குப் பயனுமில்லை, ஏன்? கடவுள் என்பது ஆற்றல் மிக்க பொருள்; விருப்பு, வெறுப்புகளைக் கடந்தது. கடவுளை முன்னிட்டு வழிபாடு செய்யினும் பயன் முழுவதும் உயிர்க்கேயாம்! வழிபாட்டின் பயனாக உயிர் அறிவு பெறுகிறது; தெளிவு பெறுகிறது; இன்புறுகிறது; இதற்காகத் தான் கடவுளை உயிர் வழிபடுகிறது. வழிபடுதல் என்பது கடவுளின் பேரறிவை, பேராற்றலைப் பெறுவதற்குரிய உயிரின் முயற்சியேயாம்!

- “மக்கள் சிந்தனை"-1-9-80