பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/192

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

180

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அன்பே! வேறுவேறு குறிக்கோளுடன் அன்புடையராகப் பழகுதல் உண்மை அன்பன்று. அஃதொரு வாணிகம். அன்பு ஏன்? எதனால்? என்ற காரண வினாக்களுக்கு விடைகூற இயலாது. அப்படிக் காரணம் கூற முடியுமானால் அந்த ஒரே காரணம் அன்பாக இருத்தல் என்ற உயிரியற்கைதான்.

அன்பு, உயிரின் இயற்கைக் குணம். அன்பு வாழ்க்கை உயிரியல் வளர்ச்சியில் வளர்ந்து வருகிறது. ஓரறிவுயிர் முதல் ஐயறிவுயிர்களிடத்தும் அன்பு உண்டு, ஆனால், அது வளச்சியில்லாத அன்பு நிலையில்லாத அன்பு மறக்கக்கூடிய அன்பு, இல்லை! அன்பை உறவை மறந்து மோதிக் கொள்ளக்கூடிய அளவுக்குக் கீழிறங்கக்கூடியது. மானிடச் சாதியினர் ஆறறிவினர். வளர்ந்த அன்பினராய் இருத்தல் மனிதர் கடமை. ஆனால், இன்று அப்படி இருக்கிறதா? மனிதன் ஆறாவது அறிவைப் பயன்படுத்துவதே இல்லை. இன்று மானிடச் சாதியில் பகுத்தறிவுச் செயற்பாடே இல்லை. தொகுப்பறிவுதான் இருக்கிறது. வேண்டும் என்று பழகும் காலத்தில் தமக்குச் சாதகமான நன்மைகளையே தொகுத்துப் பார்க்கின்றார்கள். வெறுப்பு வந்தவுடன் நன்மைகளையெல்லாம் மறந்துவிட்டுத் தீமைகளையே-தவறுகளையே தொகுத்துப் பழிசுமத்துகிறார்கள். நேற்று அன்பு, உறவு! இன்று பகை பழிதூற்றல்! இது மானிட இயல் இல்லை; விலங்கியல் வாழ்க்கை! மிகமிக அற்பமானவைக்கும் கூட இன்றைய மானிடச் சாதி அடித்துக்கொண்டு சாகிறது. இன்று வீட்டு வாழ்க்கையிலிருந்து வீதி வாழ்க்கை வரை அன்பு வழியதாக அமையவில்லை. ஒவ்வொருவரும் உலகம் அவர்களுக்காகவே என்று கருதுகின்றனர். ஒவ்வொருவரும் பிறிதொருவரும்-சமுதாயத்திற்குக் கடமைப்பட்டிருப்பதாக நினைப்பதே இல்லை. அதுமட்டுமன்று; கடமைகளின் வழியது உரிமை என்ற அடிப்படை நியதியையே மறந்து விடுகின்றனர். இச்சூழ்நிலையில் அன்புடையார் போலப் பலர் நடிக்கின்றனர். ஆனால் உண்மையான அன்பு யாரிடமும் இல்லை.