பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/195

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடவுளைப் போற்று! மனிதனை நினை!

183


“அன்பலால் பொருளும் இல்லை
ஐயன் ஐயாற னார்க்கே”

என்பது திருமுறை.

அன்பில் மனித குலத்தை இணைத்து வளர்த்து வாழ்விக்காதது சமயம் அல்ல. சமய வேற்றுமையால் மனிதகுலத்தை வேறுபடுத்தும் கொள்கைகளைப் பரப்புபவர்கள், பேசுபவர்கள் சமயத்தைச் சார்ந்தவர்கள் அல்லர். சமயங்கள் நிறுவனங்களாக மாறிய பிறகு, சமய நெறியிலிருந்து நெடுந்தொலைவு விலகிச் சென்ற பிறகு தம் தகுதியை இழந்துவிட்டன. அதனால் சமய அடிப்படையில் போர்கள் கூட நடந்தன-நடந்து கொண்டிருக்கின்றன! இது மக்களிடம் செல்வாக்குப் பெற்றுள்ள சமயத்தை, சமூகத் தீயசக்திகள் பயன்படுத்திக் கொள்வதன் விளைவேயாம். சமயம் காரணமன்று. ஆனால் சமயம், திருத்தும் சக்தியை இழந்துவிட்டது. உப்பே சாரமற்றுப் போனால் அதற்குச் சாரமேற்ற இயலுமா?

அன்பைத்தூண்ட, வளர்க்க, மனிதகுல ஒருமைப்பாட்டைக் காண, வையகத்தைச் செழிக்கச் செய்வதே சமயம். இந்தப் பணியில் ஈடுபடுகின்றவர்களே சமய நெறியாளர்கள்! சமயத் தலைவர்கள்!

“மக்கள் சிந்தனை” -15-10-80


துய மனைகள் கோயில்களாகும்

அன்பு, ஆற்றல் உடையது. அன்பினும் உயர் ஆற்றலுடையது வேறு எதுவும் இல்லை. அன்பு ஒரு சிறந்த செயலூக்கி, அன்பு செயலாக்கம் உடையது. அன்பு அளப்பில் ஆண்மை தரத்தக்கது. அன்பு குடத்துள் விளக்கும், உறையுள் வாளும் போலப் பார்க்க முடியாதது என்ற கருத்து உண்மையன்று. அன்பு உணர்வுமயமானது; செயல்களாக உருப்பெறுவது. இன்று ஆற்றல் மிக்க அன்பு எங்குமில்லை. வெறும் ஆசைகளால் மக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். ஆசை, பனிமூட்டம் போன்றது. அன்பு வளம் கொழிக்கும்