பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/199

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடவுளைப் போற்று! மனிதனை நினை!

187


மகிழ்வதற்காக அல்ல. காதற் கொழுநனை, மக்களை, சுற்றத் தாரை உண்பித்து மகிழ்வதற்காக அழகாக ஒப்பனைகள் தேவை. ஆனால் தான் மகிழ, பெருமைப்பட அல்ல. காதலன் மகிழ்ந்து வாழ! காதலன் கண்டு மகிழ்ந்து வாழ்தலுக்கே பெண் அழகாக இருக்கிறாள்; இருக்க விரும்புகிறாள் என்பதை, காரைக்காலம்மையார் உணர்த்துகின்றார். இது போலவே அடலேறாகிய ஆடவருக்கும் காதலியின் மகிழ்வே மகிழ்வு. அவன் அவளுடைமை. இத்தகைய ஊன், உயிர், அறிவு, உணர்வு கலந்த மனையற வாழ்க்கையே மங்கலமாம். இங்ஙனம் மங்கலமாக அமைந்த மனையற வாழ்க்கையிலேயே நன்மக்கள் தோன்றுவர். இத்தகு மனைகள் திருக் கோயில்கள், திருமடங்கள் போல்வன; தூய்மையானவை; இறைவன் மகிழ்ந்து தேடிவரும் இடங்கள் இத்தகு மனையற வாழ்க்கை உயர் சமய வாழ்க்கையே; மனைகள் கோயில்களாக மாறினால் கோயில்கள் கோயில்களாக விளங்கும்.

— ‘மக்கள் சிந்தனை’—1-11-80
சமய வழிபட்ட சமுதாயம்

மனிதன் கூடிவாழப் பிறந்தவன். மனிதன், சமுதாய வாழ்க்கைக்கு உரியவன்; கடமைப்பட்டவன். ஏன்? தோற்றத்தால் தனி மனிதனாயினும் அவனைப் படைத்து உருவாக்கி உலாவர விட்டிருப்பதே சமுதாயம் என்ற அமைப்புத்தான்; தனிமனிதனா? சமுதாயமா? என்ற கேள்வி பிறத்தல் கூடாது. பிறந்துவிட்டால் சமுதாயம் என்பதே விடை சமயம், அரசியல் ஆகியவற்றின் தோற்றக்களன் சமுதாயமே! இவற்றின் நோக்கமும் சமுதாயத்தைக் கட்டமைத்துக் காப்பதே.

சமுதாயம் என்ற அமைப்பில் எல்லாரும் இருப்பர். கற்றோர் இருப்பர்; கல்லாதவரும் இருப்பர். உடையவரும் இருப்பர்; இல்லாதவரும் இருப்பர். வலியுடையோரும்