பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/202

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தென்குமரிக் கடலோரத்தில் வாழ்வோனுக்கும் எளிதில் உறவு ஏற்படவாய்ப்பில்லாமல் காலமும் தொலைவும் பிரித்து வைத்தமையே வேற்றுமைகளுக்கு மிகுதியும் காரணம். ஆதலால் இந்திய மக்களிடையேயுள்ள வேற்றுமைகள் பல இயல்பானவை; சில வற்புறுத்தி ஏற்றுக்கொள்ளச் செய்யப்பட்டவை. சில வேற்றுமைகளை எதிர்த்து இந்திய நாட்டின் பல பகுதிகளிலும் ஒரே நேரத்தில் ஒருவருக்கொருவர் தொடர்பு இல்லாமற் கூடப் போராடியிருக்கிறார்கள். இத்தகைய வரலாற்று நாயகர்களை நினைவில் கொண்டால் இந்திய வேற்றுமைகளை எளிதில் நீக்கலாம். வேற்றுமைகளை எளிதில் நீக்க இயலாமற் போனாலும் விழுமிய ஒருமைப்பாட்டை உருவாக்க முடியும். இதற்கு இந்திய நாட்டின் பல்வேறு நாகரிகங்களை, சமயக்கொள்கைகளை, மொழி இலக்கியங்களைச் சமன்செய்து சீர் தூக்கிப் பாராட்டும் மனப்பான்மை வளரவேண்டும். எப்பொழுதுமே, இது உயர்ந்தது-அது தாழ்ந்தது என்ற விவாதத்தை ஆய்வு மனப்பான்மையின்றி வெறிக் கூச்சலாக்குபவர்கள் கலகத்தையே வளர்ப்பார்கள். எந்த ஒன்றின் தனித் தன்மையையும் அறிந்து பாராட்டிப் பேணுதல் சான்றோர்க்கு அழகு-கடமை. குறிப்பாக இன்று விவாதத்திற்கு ஆளாகியுள்ள இந்துமதத்தை ஆராய்வோம்.

உண்மையில் இந்துமதம் என ஒன்று இல்லை. பொதுவாக உலகச் சமயங்கள் வழிபடும் கடவுளின் பெயரால் விளங்கும் அல்லது அம்மதங்களைக் கண்ட ஞானிகள் பெயரால் விளங்கும். இந்து மதம் என்ற பெயர் இவ்விரண்டு அடிப்படையிலும் இல்லை. ஒரு சிலர் இந்து மதம் என்ற பெயர் சிந்து என்ற நதி அடிப்படையில் தோன்றிக் காலப்போக்கில் இந்து என்ற மருவிற்று என்பார்கள். இன்று சிந்து நதிக்கரையை இந்து சமயத்தைச் சேர்ந்தவர் யாரும் தாயகமாகக் கொண்டு இல்லை. வேறு சில அறிஞர்கள், அந்நியர்கள் இந்தியாவில் தோன்றிய சமயங்கள் அனைத்