பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/205

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடவுளைப் போற்று! மனிதனை நினை!

193


பத்திரிகை நிர்வாகிககள் அவர்களுடைய மலேயா நிருபருக்குத் தந்திச் செய்தி அனுப்பி, மீண்டும் பேட்டியில் நம்மை விளக்கம் கேட்டார்கள். மீண்டும் நாம் இந்து என்ற பெயரில் நமக்கு வெறுப்பில்லையென்றும் நாம் உண்மையில் மேற்கொண்ட வழி சைவசித்தாந்தச் செந்நெறியே என்றும் தெளிவாக விளக்கினோம். ஆனால் 1969 டிசம்பரில் தமிழ்நாடு தெய்விகப் பேரவைத் தலைமையை ஏற்றுக் கொண்ட பொழுது நாம் இந்தத் தீவிரக் கொள்கையை ஒதுக்கிவைத்துவிட்டு இந்து சமூக மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபடலானோம். ஆனால் நம்முடைய சிந்தனையும் செயலும், ஊற்றாகவுள்ள சைவசித்தாந்தச் செந்நெறிக் கொள்கையைப் பிரதிபலிப்பனவாக இருந்தன. அதாவது தீண்டாமை இல்லை. சாதிவேற்றுமை இல்லை. எல்லாருக்கும் எல்லாம் வழங்கும் சமவாய்ப்பே சமய நெறியின் அறம் என்ற திசையில் நம்முடைய பணிகள் தொடர்ந்தன. இக்கொள்கை வளர்ச்சியின் பயனாகத் தமிழ் வடிபாட்டியக்கம் தீவிர மடைந்தது; சாதி வேறுபாடற்ற முறையில் அருச்சகர்களைப் பயிற்சிகொடுத்து நியமிக்கலாம் என்ற கொள்கை உருக்கொண்டது. இக்கொள்கைகள் சித்தாந்தச் செந்நெறிக்கு முரண்பாடானவையல்ல என்பது நமது கருத்து. ஆனால் இந்து சமயத்திற்கு முரண்பாடுடையனவாக காஞ்சி காமகோடி பீடம் நினைத்தார். நம்மையும் அழைத்து விவாதித்தார். கொள்கைகளில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்து சமயம் என்ற பெயரில் தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டிக்கொள்ள விரும்பிய அவர் பேரவையின் வளர்ச்சிக்கே இடையூறாக அமைந்தார். இந்த நிகழ்ச்சிகளுக்குப் பிறகு மீண்டும் நாம் பழைய தீவிரக் கொள்கைக்குச் செல்ல வேண்டிய நிலை உருவாகியது. ஆனாலும் நம்முடைய தனிப்பட்ட சமய மொழிக் கொள்கைகள் இந்தியன் என்ற கொள்கைக்கு மாறாக ஒருபோதும் அமையவில்லை. இனி மேலும் அமையாது.