பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/209

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடவுளைப் போற்று! மனிதனை நினை!

197


முழுமையாக வெற்றிபெறவில்லை என்பது உண்மை. ஆயினும், தீண்டாமையற்ற-சாதி வேற்றுமைகளற்ற ஒரு சமுதாய அமைப்புக்குச் சமுதாயத்தை உந்திச் செலுத்தி அத்திசையில் நகர்த்தின என்பதை யாரும் மறுத்தற்கியலாது. சமுதாயத்தைத் தனித்தனியே பிரித்து அவரவர்க்கென்று தனித்தனி நலன்கலை ஒதுக்கீடு செய்து பகையுணர்வை முட்டி மோதச் செய்த வகையில் தீண்டாமை, சாதி வேற்றுமைகள் தன்னல நயப்பைக் களமாகக் கொண்டு வெற்று பெற்றுவிட்டன-வேரூன்றிவிட்டன. இதனை எதிர்த்துத் தொடர்ந்து நாடு தழுவிய போராட்டம் நடைபெற்று வந்துள்ளது. பஞ்சாபில் குருநானக்கும், வங்கத்தில் விவேகானந்தரும் கருநாடகத்தில் பசவேசரும், தமிழகத்தில் வள்ளலாரும் சமய நெறிக்களத்தில் நின்று போராடி யிருக்கிறார்கள். அரசியல்-சமுதாயத் துறைகளில் தயானந்த சரசுவதி, காந்தியடிகள், டாக்டர் அம்பேத்கார், தலைவர் பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரும், கவிஞர்களில் தேசியகவி பாரதியதும், பாவேந்தன் பாரதிதாசனும் அரும்பணி செய்திருக்கிறார்கள். இத்தகையோருடைய அரிய பணிகளின் காரணமாகத் தீண்டாமையும் சாதி வேற்றுமைகளும் கணிசமான அளவுக்குக் குறைந்திருக்கின்றன. சாதி வேறுபாடுகளற்ற சமுதாயத்தை நோக்கிச் சமுதாயம் மெள்ள நகர்ந்து வருகிறது என்பதை அன்புகூர்ந்து இந்து அரிசனச் சகோதரர்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.

சமுதாய மாற்றங்கள் எப்பொழுதும் எண்ணிப் பார்க்கிற அளவுக்கு நடந்து விடுவதில்லை. அது மனித குல வரலாற்றுக்கு இருக்கிற குறை. ஆதலால் இந்து அரிசன சகோதர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைமைகளைவிட இன்று சமூக அந்தஸ்திலும் பிற துறைகளிலும் உயர்ந்திருப்பதைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, அந்த முன்னேற்றத்தை உறுதிப்படுத்திக் கொள்வதில் அக்கறை காட்ட வேண்டும்.