பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/213

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடவுளைப் போற்று! மனிதனை நினை!

201



இந்த மதத் தலைவர்கள் தீண்டாமை, சாதி வேற்றுமைகள் ஆகியவை குறித்துத் தெளிவான இனம் காட்டிக் கொள்ளவேண்டும். மழுப்பல்கள் பயணதரா. சாதி வேற்றுமைகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் பாராட்டக் கூடாது என்று சொல்வதெல்லாம் நடைமுறைக்கு ஒத்து வராத கருத்துக்கள். மதத்துறையில் எல்லா மட்டங்களிலும் தீண்டாமையையும், சாதி வேற்றுமைகளையும் நீக்க மதத் துறையிலுள்ள பணிகளில் பதவிகளில்-எல்லாரும் எல்லா வாய்ப்புக்களையும் பெற அனுமதிப்பார்களா? இவர்கள் முகத்தில் பிறந்தவர்கள்; அவர்கள் காலில் பிறந்தவர்கள், இவர்கள் கடவுளாலேயே சிருட்டிக்கப்பெற்றவர்கள் என்றெல்லாம் உள்ள கருத்துக்கள் புறக்கணிக்கப்படுமா? இந்த வகையில் மதத் தலைவர்கள் தெளிவான கொள்கையை விளக்கம் செய்வதுடன் செயல்முறைகளிலும் காட்ட முன்வர வேண்டும்.

மத நிறுவனங்கள் தமது மக்களுடன் ஆன்மீகத் தொடர்பை இடையறாது இயக்கி உயிர்ப்புடன் வைத்துக் கொண்டிருக்க வேண்டும். இன்று இந்தப் பணியை எந்த மத நிறுவனமும் செய்யவில்லை. அதற்குரிய செயல் திட்டமும் இல்லை. ஒருசில நிறுவனங்கள் செய்வதுபோலத் தோன்றுகிறது. அது பெரும்பாலும் மேட்டுக் குடியினர், வசதியும் வாய்ப்புமுள்ளாரிடத்தில் கொண்டுள்ள உறவே தவிர, சாதாரண மக்களிடத்தில் கொண்டுள்ள உறவல்ல, நமது நிறுவனத்தைப் பொறுத்த வரையில் இத்துறையில் நமக்கு விருப்பமும் முயற்சியும் இருந்தாலும் அது முழுமை அடையவில்லை. ஆனால் அது கொண்டுள்ள உறவு சாதாரண மக்களிடத்தில் தானே தவிர மேட்டுக்குடியினரிடமல்ல; வசதி வாய்ப்புடையோரிடத்துமல்ல, இன்றுள்ள நிலையில் சாதாரண மக்களிடம் நெருங்கிய உறவுகளை, தொடர்புகளைத் தோற்றுவித்துக் கண்காணித்துப் பேணி வளர்த்துக்

கு.XII.14.