பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/222

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

210

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



அது மட்டுமா? வீடுதோறும் சென்று அங்கு வாழ்கின்ற மக்களுக்குத் தொண்டு செய்யவேண்டும் என்ற கருத்தை மாணிக்கவாசகர், “இல்லங்கள் தோறும் எழுந்தருளிச் செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை” என்று அருமையாகப் பாடுகிறார். இந்த இரண்டு பணிகளையும் இந்து சமய நிறுவனங்கள் நடைமுறைப் படுத்தாதது ஒரு பெரிய குறை.

நல்ல நிலமாக இருந்தால்கூட புழங்கி உழாது போனால் காட்டு நிலமாக மாறிவிடுகிறது. அதே போல நம்முடைய மக்களை நாம் அடிக்கடி சந்தித்து, அவர்களை முறைப்படுத்தி வாழ்விப்பது கடமை என்பது நம்முடைய சமய நிறுவனங்கள் அறிந்தாக வேண்டும். நம்முடைய சமயத்துக்கு ஒழுங்கு படுத்தப்பட்ட ஒருமைப்பாடும் தொடர்ந்து மக்களைப் பாதுக்காக்கின்ற தொண்டு நெறியும் உரிமையாக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் மதமாற்றங்கள் முற்றாக நீக்கப்பெறும்.

அதுமட்டுமல்ல நம்முடைய காலத்தில் நம் நாட்டில் நிலவுகின்ற பிற சமயங்கள் சமூக மேலாதிக்கமுடையனவாக வளர்ந்து அவைகளுடைய நெறிமுறைகளைப் பாதுகாத்துக் கொள்கின்றன. ஆனால் நம்முடைய இந்து சமூகத்தின் மீது இந்து சமய நிறுவனங்களுக்கு சமூக மேலாதிக்கம் இல்லை. இப்படியில்லாதது ஒரு காலத்தில் நம்முடைய மதத்துக்கு இருந்த பெருமை என்றுகூட நாம் கருதலாம். நமது சமயம் தோன்றிய காலத்தில் தொன்மைக் காலத்தில் தனித் தன்மைக்காகச் சுதந்தரமான சிந்தனையும் சுதந்தரமான வழிபாடும் வேண்டுமென்பதற்காக நாம் ஒழுங்குபடுத்தப் பட்ட முறைகளை வற்புறுத்தவில்லை; சமூக மேலாதிக்கத்தையும் நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் இன்றுள்ள நிலையில் நாம் சமூக மேலாதிக்கமுடைய ஒரு சமய அமைப்பை-ஒழுங்குபடுத்தப்பட்ட தொண்டு நெறியுடைய ஒரு சமய அமைப்பை ஏற்றுக்கொண்டால்தான் இதற்கொரு