பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/225

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடவுளைப் போற்று! மனிதனை நினை!

213



“இந்து மதம் மற்ற மதங்களால் அழிக்கப்படும்” என்று நம்புவது-கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்தியாவை முஸ்லிம்கள் ஆண்டபொழுதும், கிறிஸ்தவர்களாகிய ஆங்கிலேயர்கள் ஆண்டபொழுதும் இந்து மதம் ஏன் அழிய வில்லை? அல்லது அழிக்கப்படவில்லை.

மதச்சார்பற்ற கொள்கை, சுதந்திர இந்தியா எடுத்துக்கொண்ட கொள்கையல்ல. அக்பர் சக்கரவர்த்தியும், விக்டோரியா மகாராணியும் கடைப்பிடித்த கொள்கை என்பதை நினைவு கொள்வது நல்லது. இந்து சமயம், அதனுடைய வலிமையைப் பிற சமயங்களால் இழக்காது; அழியாது. இந்து சமயம் அதனுடைய மக்களிடத்தில் உருவாக்கிவைத்துப் பாதுகாத்து வரும் தீண்டாமை, சாதி வேற்றுமைகளால்தான் உள்ளீடழிந்து வலிமை இழக்கும். இந்து சமயத்தின் உண்மையான தத்துவக் கோட்பாடுகளின் படி நாயன்மார்கள், ஆழ்வார்கள் காட்டியபடி இந்து சமூகம் அமையவில்லை; இயங்கவில்லை. இந்து சமூகத்தில் நிலவிய சாதி வேற்றுமைகள் காரணமாகவும் எத்தனை சமயங்கள் தோன்றியுள்ளன ? புத்தமதம், சீக்கியமதம், வீரசைவம் இப்படிப் பலப்பல. இந்தச் சூழ்நிலையில் இந்துக்களை ஒற்றுமைப்படுத்தும் முயற்சி என்ற பெயரில் கிறித்தவ, இசுலாமிய மதங்களோடு சண்டை போடும் அணியைத் தோற்றுவிப்பது எப்படி இந்துக்களை ஒற்றுமைப்படுத்தும்? ஒரோவழி ஒன்றை எதிர்ப்பதில் ஒற்றுமை தோன்றினாலும் அது நிலையான ஒற்றுமையாக- ஆக்க வழியிலான ஒற்றுமையாக அமையாது.

இந்துக்கள் ஒன்றுபடுவது நல்லது. அவசியமும் கூட. ஆனால், மற்ற மதங்களை எதிர்ப்பதற்கு அல்ல. இதனை ஒற்றுமை என்று சொல்லக்கூடாது. இந்து சமூகத்தை ஒழுங்குபடுத்தப்பெற்ற அமைப்பாக மாற்றுவது அவசியம், ஒழுங்குபடுத்தப் பெற்ற அறமனைகள், பணிமனைகள் நமது மக்கள் நலம் கருதி அமைக்கப்படுதல் அவசியம். நமது