பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/229

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடவுளைப் போற்று! மனிதனை நினை!

217


இது இந்து நாடாகவே இருந்திருக்கும். யார் வெளியே போனாலும் கவலைப்படாது. திருக்கோயில் மடப்பள்ளிகளை உரிமை கொண்டிருந்தவர்கள் மடங்களின் சொத்து சுகபோகங்களை அனுபவித்தவர்கள் “வழக்கம்போல்” தலைவிதி என்று கூறி வாளா இருந்தனர். இன்று மக்களாட்சி அரசு மதத்துவம் மேம்பட்டதாக இடம் பெற்றுவிட்டது. மடாதிபதிகளை, இல்லை நடமாடும் தெய்வங்களை, மண்ணகத்தில் விளங்கும் கடவுளர்களை விளக்கம் கேட்கும் அளவுக்கு அரசு மேலாதிக்கம் செலுத்துகிறது. இந்தச் சூழ்நிலையில் மதத் தலைவர்கள் நடமாடுகிறவர்களானபின் மக்களை நாடுகின்றனர். பச்சை நிர்வான விளம்பர அதிகார வேட்டையாடுகின்றனர். கடவுளைப் போற்றியவர்கள் மனிதனை நினைக்க மறந்ததால், மனிதனை நினைக்கத் தொடங்கியவர்கள் கடவுளைப் போற்ற மறுக்கின்றனர். இதில் எந்த அணி நல்லது நம்மைப் பொறுத்தவரை இரண்டு அணியும் ஒன்றாதலே நல்லது. இரண்டும் ஒன்றாகா போலும்! நமக்கு இரு அணிகளும் வேண்டியவைகளே! ஏன்? இரண்டையும் ஆதரிக்காது போனால் வாழ்க்கையில் ஒரு பாதிதான் நடக்கும். இங்கே மனிதர்களை நினைக்காதவர்கள் உண்மையில் கடவுளைப் போற்றுபவர்கள்தாமா? கடவுள் தத்துவம் மனிதனை மறக்கச் சொல்கிறதா? மனிதனைத் தீண்டாமையிலும் வறுமையிலும் ஆழ்த்தி அழிக்கவா சொல்கிறது மதம்? இல்லை; இல்லவே இல்லை. கடவுளைப் போற்றுபவர்கள் மனிதனை மதித்து உயர்த்தத் தவறினாலும் ஒரு வகையில் நாத்திகர்களே, ஏன்? அவர்கள் கடவுள் சித்தத்தையே மதிக்காதவர்கள்! கடவுளை நம்பாதவர்கள். கடவுளை மறந்து விட்டு கடவுள் தன்மையைப் பெற்ற மனிதனை மதிக்கிறார்கள், போற்றுகிறார்கள். இந்த இரண்டிலும் நாத்திகத்தன்மை இருக்கிறது. இரண்டு அணிகளும் இணைதல் ஆத்திகம்! அதுவே நமது கொள்கை!

—‘மக்கள் சிந்தனை’ 15-6-82

கு.XII.15.